ஏற்றத்தாழ்வுகள் மரணத்திலும் உண்டு

அன்புள்ள சோனா
உன் மரணம் எங்களுக்கு ஒரு பாடத்தை கற்றுத்தந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. இது போல பல மரணங்கள் சொல்லித்தந்ததை உடனடியாக மறந்து போகும் எங்களுக்கு உன் மரணமாவது நீங்காத படிப்பினையை தந்தால் நலமாய் இருக்கும்.

நான் நிறைய மரணங்களை கண்டிருக்கிறேன். 5 ஆம் வகுப்பு படிக்கும் போதே முடிக்க வேண்டும் என்று வாழ்க்கையை முடித்து கொண்ட மேகலா முதல், எட்டாவதாய் பிறந்த குழந்தையை பார்க்க முடியாமல் தாய் பிரசவத்திலேயே இறந்துவிட, ஈரதுணியை போட்டு கொலை செய்த 3 நாட்கள் ஆன குழந்தை,பாலியல் வன்முறையால் இறந்துபோன தோழிகள் வரை ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கலாம்.
பிறப்பில் மட்டும் இல்லாமல் இறப்பில் கூட அலட்சியப்படுத்தி ஒதுக்கி போகிற மரணங்கள் நிறைய. ஒருவரின் மரணம் பல்லாயிரக்கானக்கான மரணங்களுக்கு காரணமாவதும், மக்களின் அதிர்ச்சியை தெரிவிக்க திட்டமிட்டு எறும்பை கொலவது போல கொலைகள் நடந்த கதை அறிவோம், சமீபத்தில் ஈராக்கில் இரு வேறு மத குழுக்களிடையே நடக்கும் சண்டையால் சின்ன குழந்தைகள் கூட சுடப்படுவதும் பார்க்கும் போது எந்த பாதிப்பும் இல்லாது மரத்து போய்விட்ட என் மனதை கண்டு எனக்கே பயமாயிருக்கிறது.
உன்னுடைய மரணத்தைவிட அதற்குமுன் நீ பட்ட துன்பங்களை படித்த போது அதிர்ச்சியாய் இருந்தது. என் மகனுக்கு கிட்டதட்ட உன் வயதுதான்.அவன் இப்போது அவனுடைய பெரியம்மாவின் வீட்டில்தான் இருக்கிறான். என்றாலும் நாளைக்கு மூன்றுமுறை பேசாவிட்டால் கவலையாக இருக்கிறது. நீ கொலை செய்யப்பட்டதை அறிந்து உன் அம்மாவிற்கு எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய கூட முடியவில்லை.
ஆனால் உன் வீட்டில் வறுமையின் காரணமாய் உன்னை விற்றுவிட்டார்கள் அதுவும் 5000 ரூபாய்க்கு. பள்ளிக்கு போகவேண்டிய வயதில் நீ பலர் வீட்டில் வேலைக்கு சென்றிருக்கிறாய். பெற்றோர்களை விட்டு பிரிய உனக்கு பயமாய் இருந்திருக்கும். முதல் முதலாய் நீ வேலை செய்த வீட்டு தலைவர் உன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டபோது உன் உணர்ச்சிகள் எப்படி இருந்திருக்கும்? வேலையை விட்டுவிடவும் முடியாதபடி உன் பெற்றோர் கடன் பட்டிருக்க, எத்தனை நாள் மிருக தனமாக நீ நடத்தப்பட்டாய் என்பதையும், இறுதியில் மாறி மாறி இருவர் உன்னை வன்புணர நீ இறந்துவிட, பெருகிய இரத்த பெருக்கை தடுக்க துணிஅயை வைத்து அடைத்து சித்திர வதை செய்ததோடு மட்டும் இல்லாமல் உன்னை தற்கொலை செய்து கொண்ட மாதிரி தூக்கில் தொங்கவிட்டு போனவர்களுக்கு என்ன துணிவு இருந்திருக்க வேண்டும். அதை மறைக்க பணமும் அதிகாரம் கொண்டு உன் பெறோரிடம் இன்னும் பணம் கொடுத்து வழக்கை தற்கொலையாக்க முயல்வதையும் கண்டு வருந்தத்தான் முடிகிறது.
உன்னை போல எத்தனையோ குழந்தைகள் பல வேறு அரசியல், இ னம், மத வேறுபாட்டால் கொலை செய்வது இப்போதெல்லாம் நாள் தோறும் வழமையான செய்தியாகி விட்டது. பாலியல் வன்முறையால் இறந்து போன குழந்தைக்கு (6 வயது) ஈடாக 2000 ரூபாய் தந்ததைவிட கொடுமை, இறந்ததுதான் இறந்து போய்விட்டாள், குறைந்த பட்சம் உணக்கு பணமாவது தந்திருக்கிறார்கள். வழக்கென்று போடாமல் கிடைத்தை கொண்டு மகிழ்ச்சியாய் இரு என்றும் சொன்ன காவல் அதிகாரியின் கரிசனம் எனக்கு இன்னும் சினத்தை தருகிறது.
பிறப்பும் வாழ்வதற்கான வாய்ப்புகள் கிடைக்க மட்டும் இல்லை, இறப்பதற்கு கூட செல்வமும் செல்வாக்கும் வேண்டும் போல் இருக்கிறது. இல்லை என்றால் தினமும் இறந்து போகும் கிருமிகள் போல வாழ்க்கை முடிந்து போகிறது சிலரின் அடக்குமுறையாலும் அதிகார பலத்தாலும்.
உன்னை போல வளர்சிதை மாற்றங்களையும் வாழ்க்கையின் சின்ன சின்ன தருணங்களையும் கூட ரசிக்க வாய்ப்பு இல்லாமலே மரணத்தை தழுவிக்கொண்ட ஆயிரக்கானவர்களின் வாழ்க்கை ஒரு பாடம் படிப்பித்தால் பின்னாளில் இத்தகைய நிகழ்வுகளை தடுக்கலாம்.
தூக்கு கைதியின் கடைசி நேரம் இயல்பாக நிகழ்ந்த மரணம், மரணத்தின் மீதான பயம், மரணம் பற்றிய எண்ணங்கள், இன்னும் மரணத்தின் பிறகு நடக்கும் நிகழ்வுகள் குறித்தான பதிவுகள் பல படித்தேன்.
சில காலமாகவே பறவை காய்ச்சலால் மக்கள் இறந்து போனால் ஒவ்வொருவரின் கலாசாரப்படி என்ன செய்ய வேண்டும் என்று பல மத தலைவர்களை அழைத்து பேசி திட்டமிட்டு கொண்டிருந்தோம்.
அப்போது ஜூனியர் விகடனில் வந்த இந்த மரணம் பற்றிய செய்தி கண்டபோது, மக்கள் இறந்து போனால் என்ன செய்வது என்று கவலை படும் ஒரு சமூகத்தையும், அகால மரணங்களை, கொலைகளை சர்வசாதாரணமாக கொள்ளும் இன்னொரு சமூகத்தையும் கண்டு என்னால் வருத்தப்படாமல் இருக்க முடிவதில்லை.
தன் இனம் இறந்து போனால் பதறி போகும் ஒரு நாடு, அடுத்தவரின் நாட்டில் ஆயிரககணக்கானோரை கொன்று குவித்தற்கும் இடையே இருக்கும் வேறுபாடும் என்னை அதிர்ச்சியடய வைக்கிறது. அப்படியானால் உயிருக்கு கூட நிறம், இனம், செல்வத்தானால ஏற்ற தாழ்வுகள் இருக்கிறதா என்ற வினாவே இப்பதிவிற்கு காரணம். இந்த என் பதிவு போட்டிக்காக இல்லை. இளமையில் கொடியது வறுமை மட்டும் இல்லை, வாழ்க்கையும் கூடத்தான்.