எடுக்கவோ,கோர்க்கவோ?

மகா பாரதத்தில் கர்ணனும் துரியோதனன் மனைவி பானுமதியும்   சொக்கட்டான்   ஆடிக் கொண்டிருந்தபோது,துரியோதனன் வரவே பானுமதி எழ,தான் தோற்கப்போகிறோம் என்று பயந்து அவள் எழுகிறாள் என்றெண்ணி கர்ணன் அவள் மேகலையைப் பிடித்திழுக்க முத்தெல்லாம் தரையில் சிதற ,துரியோதனன்,''எடுக்கவோ,கோர்க்கவோ?''என்று கேட்ட கதை அனைவருக்கும் தெரியும்.இந்தக் கேள்வியில்தான் ஒரு சந்தேகம்.துரியோதனன் கர்ணனிடம் இருந்த நட்பின் காரணமாக சிதறிய முத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து பின் அதைக் கோர்த்து ஆபரணமாக்கும் வேலையை அரண்மனையில் இருந்த யாரிடமாவது  கொடுத்திருக்கலாம் அல்லவா?வெறுமே ,''எடுக்கவா?''என்ற கேள்வியோடு முடித்திருக்கலாமே?கூடுதலாக ஏன் ''கோர்க்கவா?''என்று கேட்டான்.இந்த சந்தேகம்  நிறையப் பேருக்கு வந்தது.அப்போது அங்கு வந்த சகாதேவனிடம் நடந்ததைக் கூறி விளக்கம் கேட்டனர்.சகாதேவன் சொன்னது:
''ஒருவனுக்கு பயம் அதிகம் வந்து விட்டால் அவன் கை,கால் நடுங்கும்.அதேபோல ஆத்திரப்படுபவனுக்கும் கை கால் நடுங்கும்,உதறும். இந்த சம்பவத்தில் துரியோதனன் தவறாக எண்ணிவிடுவானே என்ற பயத்தில் கர்ணனுக்கும்,பானுமதிக்கும் கை,கால் நடுங்குது.துரியோதனனுக்கு ஆத்திரம் ஏற்பட்டிருந்தால் அவனது கை,காலும் நடுங்கியிருக்க வேண்டும்.ஆனால் அவன் நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தான்.என்ன காரணம்?அவன் தன் மனைவியையும்,நண்பனையும் சந்தேகப் படவில்லை.முத்துக்களைக் கோர்க்க கை நடுங்கக் கூடாது.அவனுக்கு ஆத்திரம் இல்லை.நம்பிக்கை இருக்கிறது.அவன் கை நடுங்கவில்லை.எனவே அவனால் முத்துக்களை எடுக்கவும் முடியும்;கோர்க்கவும் முடியும்.அதனால்தான் அவன்   'கோர்க்கவோ' என்ற கேள்வியையும் சேர்த்துக் கேட்டிருக்கிறான்.''
                                                 --தென்கச்சி சுவாமிநாதன் .