பாஸ்கரனும், ஷ்ரீதரனும் சிறுவயது முதல் நண்பர்களாகயிருந்தனர். இருவரும் ஒரே குருகுலத்தில் குரு நித்தியானந்தரிடம் பயின்றனர். குருகுலவாசத்திற்குப் பிறகு, பாஸ்கரன் தானும் ஒரு குருகுலம் அமைத்து, மாணவர்களுக்குக் கற்பித்தான். ஷ்ரீதரன் தன் தந்தையின் ஜவுளிக் கடையைநிர்வகித்தான். இருவருக்கும் திருமணம் நடந்து, குழந்தைகளும் உண்டாயின. நண்பர்கள் அவ்வப்போது சந்திப்பதுண்டு.
பாஸ்கரன் இயல்பாகவே எதையும் ஒளித்துப் பேசத் தெரியாதவன். தனக்குத் தோன்றியதை முகத்திற்கு நேராகச் சொல்லி விடுவான். நேர்மையான வழிகளைக் கடைப்பிடிப்பவன். அதனால், தன்னுடைய மாணவர்களிடமும், கிராமத்திலுள்ள மற்றவர்களிடமும் தான் பின்பற்றும் கொள்கைகளையே எதிர்பார்த்தான்.
ஷ்ரீதரன் அதற்கு நேர்மாறானவன்! இயல்வாகவே, சாந்த குணம் படைத்தவன். தன்னை யாராவது குறை கூறினால்கூட, எதிர்த்து சண்டை போட மாட்டான். ஆனால், தனக்கு ஏற்படும் ஏமாற்றங்கள், மோசடிகள், அவமானங்கள் அனைத்தையும்மனத்திற்குள்ளேயே வைத்துப் புழுங்கிக் கொண்டிருப்பான்.
ஒருசமயம், ஷ்ரீதரன் நோய்வாய்ப் பட்டான். அதையறிந்த பாஸ்கரன் தன் நண்பனைக் காண வந்தான். அவர்களுடைய குரு நித்தியானந்தருக்கு மருத்துவமும் தெரியும். அதனால் ஷ்ரீதரனை பாஸ்கரன் அவரிடமே அழைத்துச் சென்றான். ஷ்ரீதரனைப் பரிசோதித்த குரு, "இது உடலைப் பொறுத்த நோய் அல்ல! உன் மனத்தில் அமைதி இல்லாததால் ஏற்பட்டுள்ளது!" என்றார்.