எந்த ஊர் நான் இருந்த ஊர்

இந்த ஊர் எனது ஊர், எனது மொழி என்று ஏனோ எனக்குள் ஒரு பற்றோ அதீத ஆர்வமோ இருந்ததில்லை.இவர் என் ஊரை சேர்ந்தவர் என்று சிறப்பாக யாரிடமும் நட்பும் வந்ததில்லை. ஊரின்மேல் பாசம் இல்லாமல் ஒருவரால் இருக்க முடியுமா என்று என்னுடன் பணிபுரிவோருக்கு சில சமயம் ஆச்சரியம் வந்திருக்கலாம். அதுவும் நான் தனியாக இருந்த போது, இவரும் இந்தியாவில் இருந்துதான் வந்திருக்கிறார் என்று என் சக ஆய்வக மாணவர்கள் யாரையாவது அறிமுகம் செய்து வைத்தாலும் உடனே மகிழ்ச்சி பொங்கி பெருகியதில்லை. சில சமயம் பல நாட்டு மக்களுடன் கூடி இருக்கும் போது சரியான தகவல் இன்றி யாரேனும் இந்தியாவை பற்றி பேசும் போது அதை சரிப்படுத்தி இருக்கிறேன் ஆனாலும் உணர்ச்சி கொந்தளிப்பெல்லாம் ஏற்பட்டதில்லை.
இப்போது மதி, செல்வராஜ் இவர்களின் சென்னை பற்றிய பதிவுகளை படித்தபோது எனக்கு அப்படி நினைவுகளை கிளப்புகிற ஊர் எதுவாக இருக்க முடியும் என்று யோசித்ததில் எதுவுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

நாச்சியார்கோவில், தேரழுந்தூர், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, கும்பகோணம், திருப்பனந்தாள், ஆடுதுரை, பாண்டிச்சேரி, புதுதில்லி, பங்களூர், ஹூஸ்டன், நியுயார்க், நியுஜெர்ஸி என்று பல ஊர்களில் என் வாழ்நாளில் இன்றுவரை செலவழித்திருந்தாலும், மனதுக்கு பிடித்த ஊர் என்று ஏன் எதுவும் இல்லை?
ஒருவேளை பிள்ளைப்பருவம் முதல் வேலையும் படிப்பும் வீடும் என்றூ ஆனதாலா, நண்பர்களோடு ஓடி விளையாடி கடைகள் சினிமா என்று சுற்றாததாலா என்று புரியவில்லை. ஊர் என்றால், பள்ளியும் பணி செய்த இடங்களும் மட்டுமே நினைவுக்கு வருகிறது. படித்த இடங்களை நினைத்துக் கொண்டால் நிறுவனங்கள் எனக்குள் மகிழ்ச்சியை தருகின்றது. நான் படித்த பள்ளி மாணவிகளிடம் இருந்து வருகின்ற மின்மடல்கள், பேராசிரியர்கள் பிரசுரிக்கின்ற கட்டுரைகள் ஏற்படுத்தும் உணர்வு மண்ணின் மீதுள்ள ஆசையைவிட அதிகம்.
மனதுக்கு நிம்மதியை தந்த சில இடங்கள் உண்டு, மலையும் பனியுமாய் இருந்த பத்ரிநாத், பொங்கி பெருகிய துங்கபத்ரா என்று. ஆனாலும் எனது ஊர் என்று எதுவுமே இல்லை. இதனாலேயே என்னவோ இந்தியா செல்லாமல் பல வருடங்கள் ஆன பின்னும் கூட ஏக்கமாய் இல்லை. இந்தியா செல்லவில்லை என்கிறபோது வரும் வருத்தம் எல்லாம் அங்கே இருக்கிற என் சகோதரனை பார்க்காத ஒரே வருத்தம் தான். அவன் வேறு நாட்டுக்கு இடம் பெயர்ந்து விட்டால், அதன் பிறகு அங்கே செல்ல மட்டுமே ஆசை இருக்கும்.
இந்தியாவிலேயே வாழ்நாள் பெரும் பகுதியை கழித்த அம்மா, அப்பவும் அதையே சொல்கிறார்கள்.சமீபத்தில் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்கு வயதாகி விட்டதால் காவேரி கங்கை என்று இந்தியாவில் இருக்க விருப்பமா, திடீரென இறந்துவிட்டால் என்ன ஆகும் என்ற வருத்தம் உண்டா என்று சகோதரிகள் கேட்டுக்கொண்டிருந்தோம். எங்க இருந்தா என்ன, அமெரிக்காவில் இருந்தால் உங்களுக்கு வேலை, இந்தியாவில் இருந்தால் பிள்ளைக்கு, இதிலென்ன எங்களுக்கு கஷ்டம் என்பதே அவர்கள் பதிலாக இருந்தது.
வீட்டு பாசமும் ஊர்ப்பாசமும் ஏன் எங்கள் யாருக்குமே இல்லை? ஊர் என்பது அங்கே இருக்கும் , நம் மீது நேசமும் ஆசையும் கொண்ட மக்கள்தான். அப்படி நேசமும் ஆசையும் இல்லாமல், வேற்றுமை உணர்வோடு, செய்யும் ஒவ்வொரு செயலிலும் காயப்படுத்தும் நோக்கம் கொண்டவர்கள் நிறைந்து இருக்கும் போது ஊர்மீது பாசமும் நேசமும் எப்படி வரும்? இதனாலேயே எனக்கு வித்யா போன்றவர்கள் சொல்லும் சொல்லில் இருக்கும் வெறுமை புரிகிறது. அதன் மீது உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடிகிறது.ஜெய்ஹிந்த் என்றாலும் united we stand என்றாலும் வெற்று புன்னகையுடன் இருக்க, மனிதர்களை மனிதர்களாக மட்டுமே, இந்த மதத்துக்காரன், இ னத்துக்காரன், மொழி பேசுபவன் என்றெல்லாம் இல்லாமல் பார்க்க முடிகிறது.
நாளையே நியுஜெர்ஸியைவிட்டு கிளம்ப வேண்டுமானாலும் கூட வருத்தம் எதுவும் இருக்காது என்றே தோன்ருகிறது. சகோதர சகோதரிகள் அன்றி மனதுக்கு அருகில் நெருக்கமானவர்கள் அதிகம் பேர் இல்லை. மிகவும் நெருக்கமான சகோதரர்களோடு பேசாவிட்டாலே கூட ஒன்றும் இல்லை. அந்த ஆசையும் நேசமும் காணாமல் போகுமா என்ன?