தியானம் செய்வது எப்படி?

ஆம் நம் மனம் தான் தியானத்திற்கு எதிரி. மனதின் இயல்பு எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பது.

ஆனால் தியான நிலையோ மனமற்ற, எண்ணங்களை கடந்த நிலையில் ஏற்படுகிறது.

ஒருமுறை எண்ணங்களை கடப்பது எப்படி என்ற நுட்பம், balance கிடைத்து விட்டால் போதும் அப்புறம் மறப்பதில்லை.
தியானம் எளிதாகி விடும். அது மிதி வண்டி ஓட்டிப் பழகும் போது கிடைக்கும் balance ஐ போன்றது.

தியானம் செய்ய உட்கார்ந்து விட்டு ' என்ன எனக்கு இன்னும் தியானம் வரலை..? தியானம் எப்படி இருக்கும்' என்று தொடர்ந்து மனம் எண்ணிக் கொண்டிருந்தால் தியானம் ஏற்படுவதில்லை.

மேலும் தியானம் செய்ய உட்காரும் போதே 'நான் அடுத்த பத்து அல்லது இருபது நிமிடங்களுக்கு எதைப் பற்றியும் எண்ண மாட்டேன்' என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்வது நன்று.

தியானம் செய்ய அமர்ந்தவுடன் மனம் ஏகப் பட்ட எண்ணங்களை அவிழ்த்து விடும். அப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் 'நாம் தியானத்தில் இருக்கிறோம்' என்ற உணர்வுடன், அந்த எண்ணங்களுடன் கலந்து நம்மை மறந்து பின் செல்லாமல், அந்த எண்ணங்களை சற்று விலகி நின்று உற்று பார்க்க வேண்டும். இதற்கு தான் நமது விழிப்புணர்வு உதவுகிறது.

விழிப்புணர்வின் ஆற்றல் அதிகமாக உள்ளவர்களுக்கு எண்ணங்களை அவற்றுடன் ஒட்டாமல் விலகி நின்று பார்ப்பது எளிதாகிறது.

அப்படி பார்க்க, பார்க்க எண்ணங்கள் மெதுவாக தங்கள் வலுவை இழக்கின்றன.

எண்ணங்கள் மெதுவாக அடங்குகின்றன.

அப்படி எண்ணங்கள் அற்ற நிலையில் தான் தியானத் தன்மை உண்டாகிறது.

அனைத்து தியான முறைகளும் மனமற்ற நிலையை அடையும் வழிக்கான கருவிகளே.

மேலே சொல்லப் பட்டதும் அவற்றில் ஒரு முறை.

இன்னும் வரும் பதிவுகளில் எண்ணங்களை கடந்து செல்லும் நுட்பத்தை பற்றி விரிவாக விவாதிப்போம்.