உலகம் முழுவதும் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குடமிளகாயில் உள்ள ஒரு பொருள் உடல் பருமனை குறைக்க உதவுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஆராய்ச்சியாளர் ஜாங் ஒன் யுன் தலைமையிலான குழுவினர், உடல் பருமனை குறைப்பதில் குடமிளகாயின் பங்கு குறித்து ஆய்வு செய்தனர். ஒரு பிரிவு எலிகளுக்கு அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுடன் குடமிளகாய் கலந்த உணவை கொடுத்து வந்தனர். மற்றொரு பிரிவுக்கு அதே கொழுப்புச் சத்து உணவை மட்டும் கொடுத்தனர்.
குறிப்பிட்ட நாட்கள் கழித்து எலிகளின் உடல் பருமனை சோதனையிட்டனர். குடமிளகாய் கலந்த உணவு சாப்பிட்ட எலிகளின் எடை அதை சாப்பிடாத எலிகளைவிட 8 சதவீதம் வரை குறைந்திருந்தது. மேலும், கொழுப்புச் சத்தின் அளவு கட்டுப்பட்டிருந்தது. குடைமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற பொருள், கொழுப்பை குறைக்கிறது. உடல் பருமனிலிருந்து விடுபட உதவுகிறது. பருமனை குறைக்க மருந்து தயாரிக்க இந்த ஆராய்ச்சி உதவும் என ஜாங் தெரிவித்தார்.