காதல் கவிதை எழுதுவோம் வாரீர் !

மூத்த படைப்பாளிகள் புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்க பல்வேறுபட்ட முயற்சிகளை செய்கிறார்கள்...அவர்களின் கடந்த கால படைப்புக்கள் நாம் கொஞ்சம் மீட்டு பார்த்தால் என்ன? இளம் படைப்பாளிகளே வாருங்கள் கவிதைகள் எழுத படிப்போம்...முதலில் எங்களுக்கு தேவை “காதல் கவிதை” இதோ ஒரு மூத்த படைப்பாளியின் அருமையான காதல் கவிதை ! இந்த கவிதைக்கு உங்கள் கருத்துகளை தாருங்கள் ! இனியொரு விதி செய்வோம் !

திரு.பொள்ளாச்சி அபி அவர்களின் கடந்தகால படைப்புகளை வாசிக்கும் போது கிடைத்த ஒரு அருமையான காதல் கவிதை உங்களுக்காக மீள் பிரசுரம் செய்கின்றேன் ! முழுவதும் படியுங்கள்...இடை விலகல் செய்பவர்களுக்கு எதுவித மறுப்பும் இல்லை ! கருத்துகளில் பேசுவோம் !

__________________________
"காதல் கவிதை எழுதப்போறேன்- பொள்ளாச்சி அபி
காதல் கவிதை எழுதப்போறேன்-நான்
காலம்போற போக்கிலே இணையப்போறேன்.!
மூளையற்ற வார்த்தைகளைப் போட்டு
மூங்காரியொன்னைப் பாடப்போறேன்..!

முந்தானைவாசமே பிடிக்கப்போறேன்

முக்கு,முக்கா நின்னு ரசிக்கப்போறேன்.
வேலைவெட்டியெல்லாம் ஒதுக்கப்போறேன்.
வேதனைகளை நானும் மறக்கப்போறேன்.
மனசுக்குள்ளே இதையெல்லாம்
பாடம் பண்ணப்போறேன்..அப்புறம்
பொண்ணுமட்டும்தான் உலகமுன்னு
எழுதப்போறேன்,அதுக்கு போக்கிரின்னு
பேருவந்தா தாங்கப்போறேன்..!
தின்னது செரிக்காமே திரியப்போறேன்.
திமிருன்னு சொன்னாக்கூட
உதைக்கப் போறேன்..நான்
உதைக்கப் போறேன்..!

தமிழெனக்குத் தெரியுமின்னு

காட்டப் போறேன்..!
தத்துப்பித்து என்றாலும் எழுதப் போறேன்
கவிதைன்னா அதுதான்னு சொல்லப்போறேன்.
கழுதைன்னாலும் கவலையா படப்போறேன்.?

கட்டழகுப் பெண்ணுக்கு வலைவீசப்போறேன்.

காட்டான்னு சொன்னாலும் அததள்ளப்போறேன்.
என்னடாயிது தகிடுதத்தம்னு கேட்டாக்கூட
அவனை இழுத்துவந்து வலைக்குள்ளே
மாட்டப்போறேன்..

படிச்சதும் புரியாமே,எழுதவும் தெரியாமே

என்னடா இது அலங்கோலம்னு அவன்
ஆத்திரப்பட்டா இல்லை அடிக்கவும் வந்தா
என்னோட சுதந்திரம்னு சொல்லப்போறேன்.
நான் சொல்லப்போற பதிலைக்கேட்டு
விழிச்சு அவன் நின்னுகிட்டு
நீ எழுதுவதெல்லாம் கவிதையான்னு
கேட்டா போதும்-அப்புறம்
எதுதாண்டா கவிதைன்னு-நானும்
திருப்பி கேட்கப் போறேன்.!

வள்ளுவனும்.கம்பனும்,இளங்கோவனும்

வளத்துவிட்ட தமிழுடா இதுன்னு
இந்த பாரதிமட்டும் எங்கிட்டே
கேட்கட்டும்..அவங்கெல்லாம்
யாருன்னும் நான் கேட்கப்போறேன்.!

அறம்செய்ய விரும்புன்னு தமிழை

ஆயுதம் ஆக்கினாளே
அவ்வைப் பாட்டி.அப்படின்னு
அவன் கேட்டா..
தையல் சொல்கேளேல்னு அவ
சொன்னதைத் திருப்பிப்போட்டு
மடக்கப்போறேன்..!

மெல்லத்தமிழினி சாகும்னு தெரியாமே

சொல்லிட்டேன்னு அவன் வருத்தப்பட்டா
நீ தீர்க்கதரிசி,தெரிஞ்சேதான்
சொல்லியிருப்பே,அதுதான்
நடக்குமுன்னு நான் குதிக்கப்போறேன்..!
அப்புறம்..
காதல் கவிதை எழுதப்போறேன்-நான்
காலம்போற போக்கிலே இணையப்போறேன்.!
மூளையற்ற வார்த்தைகளைப் போட்டு
மூங்காரியொன்னைப் பாடப்போறேன்..!
அதுக்கு நானே மார்க்கும் போட்டுக்கப் போறேன்.!”