மனம் கடக்கும் கலை

சென்ற பதிவில் விழிப்புணர்வு தியான முறையை பற்றி விவாதித்தோம்.

அதன் நுட்பத்தை பற்றி இன்று தொடர்வோம்.

எண்ணங்களற்று போகும் நிலையே தியானம்.

எண்ணங்கள் அற்ற நிலையே மனம் கடந்த நிலை.

மனதை கடக்க உதவுவது விழிப்புணர்வு.

இந்த விழிப்புணர்வு என்றால் என்ன?

உதாரணமாக - நாம் தியானம் செய்ய அமர்கிறோம்.

அப்போது தூரத்தில் இருந்து ஏதோ ஒரு புதிய திரைப்படப்பாடல் வந்து நம் செவியில் விழுகிறது.

உடனே நமக்கு சமீபத்தில் அந்த படத்துக்கு சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
- கூட வந்த நண்பனின் ஞாபகம் வருகிறது
- நண்பனின் பிறந்த நாள் இந்த வாரம் என்பது ஞாபகம் வருகிறது
- பிறந்த நாளுக்கு சிறு விருந்துக்கு எங்கு போகலாம் என்று மனம் சிந்திக்கிறது
- ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் பதார்த்தங்கள் சிறப்பாக இருக்கும் என்று மனம் சொல்கிறது
- அங்கு ஒரு முறை போய் சாப்பிடும் போது நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது...

இந்த எண்ணங்களெல்லாம் நொடிகளில் வந்து போகும்.

ஆக இது தொடர்ச்சியாக போய் கொண்டே இருக்கும். நாம் தியானம் செய்ய அமர்ந்ததையே மறந்து விடுவோம்.

ஏனென்றால் நமது மனம் அவ்வாறு பழ(க்)கி விட்டது. நாம் மனம் போன போக்கில் போய் கொண்டிருக்கிறோம்.

எப்போதாவது நாம் என்னென்ன எண்ணங்களை எண்ணுகிறோம் என்று கவனித்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.

நமது மனமாகிய வேலைக்காரன் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஏனென்றால் எஜமான் அங்கு இல்லை.

எஜமான் வந்தால் வேலைக்காரன் அடங்கி விடுவான் .

அந்த எஜமான் தான் விழிப்புணர்வு.

வேலைக்காரனாகிய மனத்தை கண்காணிக்கும் எஜமான் தான் விழிப்புணர்வு!

இன்னும் சொல்வதென்றால் மேலே சொன்ன அதே உதாரணம்:

இப்போது நாம் விழிப்புணர்வுடன் தியானத்தில் அமர்கிறோம்.

அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

நாம் தியானம் செய்ய அமர்கிறோம்.

அப்போது தூரத்தில் இருந்து ஏதோ ஒரு புதிய திரைப்படப்பாடல் வந்து நம் செவியில் விழுகிறது. ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டிருக்கிறோம்.)

உடனே நமக்கு சமீபத்தில் அந்த படத்துக்கு சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
- கூட வந்த நண்பனின் ஞாபகம் வருகிறது - நண்பனின் பிறந்த நாள் இந்த வாரம் என்பது ஞாபகம் வருகிறது ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
- பிறந்த நாளுக்கு சிறு விருந்துக்கு எங்கு போகலாம் என்று மனம் சிந்திக்கிறது - ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் பதார்த்தங்கள் சிறப்பாக இருக்கும் என்று மனம் சொல்கிறது - ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)

அந்த கவனிப்பு உணர்வு தான் விழிப்புணர்வு.

இப்படி பார்த்து கொண்டு வரும் போது விரைவில் எண்ணங்கள் வலுவிழந்து போய், மறந்து விடும்.

அங்கு தான் தியானம் நிகழ்கிறது.