குற்றவாளி நீ ஒருவன்தான்!

ஜெர்மனி நாட்டை (1797-1888) ஆண்ட முதலாம் வில்லியம்ஸ் சத்தியத்திற்கும், நேர்மைக்கும் மிகவும் முக்கியத்துவம் அளித்தவர்! கீழ்க்காணும் சுவையான நிகழ்ச்சியில் இருந்து அவருடைய சிறப்பியல்பைத் தெரிந்து கொள்ளலாம்!

ஒருமுறை
, அவர் தனது ராஜ்யத்தின் கிழக்குப் பகுதியிலிருந்த போட்ஸ்டாம் என்ற நகரின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார். சிறைக் கைதிகள் அனைவரையும் சந்திக்க விருப்பங்கொண்ட வில்லியம்ஸ் முதலில் ஒருவனை அழைத்து அவனிடம் அவன் சிறைப் படுத்தப்பட்ட காரணத்தை வினவினார். அதற்கு அவன், "மகாராஜா! ஜமீன்தாரின் வீட்டைக் கொள்ளையடித்தவர்கள் திருட்டுப் பொருட்களை என் வீட்டிற்குள் வீசியெறிந்தனர். ஆகவே, என்னைத் திருடனாகக்கருதி சிறையில் அடைத்து விட்டனர்" என்றான்.

மற்றொருவனை விசாரித்த போது
, அவன் "மகாராஜா! கிராம அதிகாரிக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஒருமுறை அவரை எதிர்த்து சிலர் கலகம் செய்த போது, நான்தான் அவர்களைத் தூண்டிவிட்டேன் என்று பொய்க்குற்றம் சாட்டி, என்னை சிறைக்கு அனுப்பி விட்டார்!" என்றான்.

மூன்றாவது
கைதி, "மகாராஜா! யாரோ திருட்டுக் கையெழுத்துப் போட்டதற்கு, என்னை குற்றவாளி ஆக்கி விட்டனர்!" என்றான். இவ்வாறு, ஒவ்வொரு கைதியும் தான் அநியாயமாக சிறையில் அடைக்கப் பட்டிருப்பதாகக் குறை கூறினர்.

ஆனால் ஒரேயொரு
கைதி மட்டும், "மகாராஜா! நான் உண்மையிலேயே குற்றவாளி! செய்யக்கூடாத ஒரு குற்றத்தை நான் செய்தேன். அதை நினைத்து நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன்!" என்றான்.

"
அப்படியா!" என்ற வில்லியம்ஸ், "இந்த சிறையில் உள்ள கைதிகளில் நீ ஒருவன் மட்டுமே குற்றவாளி. உன்னைப் போல் ஒரு குற்றவாளியை இங்கே விட்டு வைத்தால், நீ மற்ற நிரபராதிகளைக் கெடுத்து விடுவாய்!" என்று கூறிவிட்டு, அவனை மட்டும் விடுதலை செய்தார்.