சிவபுரி கிராமத்தின் எல்லையில் ஓர் அடர்ந்த காடு இருந்தது. அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தில் பல மோகினிப்பிசாசுகள் வசித்து வந்தன. ஒருநாள், அவர்களுடைய அணியில் புதிதாக ஒரு மோகினிப்பிசாசு வந்து சேர்ந்தது. அதன்பெயர் கிசுகிசு. அங்கு வந்து சேர்ந்த நாள் முதல், கிசுகிசுவிற்குத் தூக்கமே வரவில்லை. மற்ற மோகினிப் பிசாசுகள் இரவு முழுவதும் கும்மாளம் மடித்துவிட்டுப் பகற்பொழுதில் உறங்கிவிடும்.
ஒருநாள் இதைத் தன்னுடைய தோழியான கிங்கிணிப் பிசாசிடம் கூறியது. "இதற்கெல்லாம் வருத்தப்படாதே! ஒரு காரியம் செய்! இரவு முழுவதும் ஆலமரக்கிளையில்இருந்து தலைகீழாய்த் தொங்கு! பகலில் தூக்கம் வரும்!" என்றது. அப்படி ஒருநாள் செய்து பார்த்தும், கிசுகிசுவிற்குத் தூக்கம் வரவில்லை.
மறுநாள் கிங்கிணி, "சிவபுரியில் ரங்கச்சாரி என்று ஒரு வைத்தியர் இருக்கிறார். அவரிடம் தூக்க மருந்து கேள்! அதை விழுங்கினால், கட்டாயம் உறக்கம் வரும்!" என்றது.
ஒரு விவசாயியின் உருவம் எடுத்துக் கொண்டு, கிசுகிசு ரங்காச்சாரியை அணுகியது. கிசுகிசுவின் வெளுத்த முகத்தையும் சிவந்த கண்களையும் கண்டவைத்தியர், "ஏன் பேய் அடித்தது போல் இருக்கிறாய்? இரவில் சரியாகத் தூங்கவில்லையா?" எனக் கேட்டார்.
"ஆமாம்!" என்று கிசுகிசு சொல்ல, அவரும் தூக்க மருந்து தந்தார். ஆனால் அதை விழுங்கியும், கிசுகிசுவிற்குத் தூக்கம் வரவில்லை.
மறுநாள் காலையில், எல்லா மோகினிப்பிசாசுகளும் தூங்கிக் கொண்டிருக்க, கிசுகிசு வழக்கப்படி தூக்கம் வராமல் தவித்தது. அப்போது, மரத்தடியில் ஒரு ஆள் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு ஒரு கல்லை அவர் மீது யெறிய, அவன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.