காக்க..காக்க…

கண்களின் வார்த்தைகள் புரியாதாஎன்ற திரைப்பட பாடலின் கூற்றுப்படி பெண்களின் உள்ளத்து உணர்வுகளைப் பிரதிபலிப்பவையாக கண்கள் உள்ளன. அந்தக் கண்களில் உண்டாகின்ற சிறு பிரச்னைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, அழகிற்கும் நல்லதல்ல.
கண்களை சுற்றியுள்ள சருமம் மிக, மிக மென்மையானது. சீக்கிரமே வறண்டு விடக் கூடியது. பெண்கள் அதிகம் கவலைப்படுவது கண்களைச் சுற்றி ஏற்படும் சுருக்கங்கள்.
25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி ஏற்படும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சம் ஐ-கிரீம் அல்லது எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் செய்யலாம். கண்களுக்கு மசாஜ் செய்யும்போது புருவங்களில் ரோம வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம்அல்லது பாதாம் எண்ணெய் உபயோகிக்கலாம். கண்களில் எரிச்சலோ, அரிப்போ இருந்தால் கைகளால் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உருவாக சுலபமான காரணமாகி விடும்.
பெண்களை வாட்டும் அடுத்த பிரச்னை கரு வளையம். பரம்பரைவாகு, தூக்கமின்மை, கம்ப்யூட்டர், டிவி முன்பு அதிக நேரம் இருப்பது, சரிவிகித உணவு இன்மை ஆகியவை கண்களில் கரு வளையம் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. இதற்கு முதல் சிகிச்சை எட்டு மணி நேரத் தூக்கம். கருவளையம் அதிகமிருந்தால் அழகு நிலையங்களில் செய்யப்படும் ஐ மசாஜ் பலனளிக்கும். ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை மேற்கொண்டால் கருவளையம் மறைந்து விடும்.
அழகுக்காக கண்களில் போடும் மேக்கப்பை இரவு படுப்பதற்கு முன்பு முற்றிலும் அகற்றி விட வேண்டும். செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை கண்டிப்பாக அகற்றி விட வேண்டும். அதன்பின், சுத்தமான தண்ணீரில் பஞ்சை நனைத்து கண்களை மெதுவாகத் துடைக்க வேண்டும்.
அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோர் தரமான லென்ஸ்களை பயன்படுத்த வேண்டும்.
மேக்கப் போடுவதற்கு முன்பாக கான்டான்ஸ் அணிவதும், இரவில் மேக்கப்பை அகற்றுவதற்கு முன் நீக்குவதும் நல்லது. இதன்மூலம், கண்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்கள் அடிக்கடி கண்களை மூடி சில நொடிகளாவது ஓய்வு தர வேண்டும்.
கண்களைப் பாதுகாக்கும் இமைப் புருவம், நமது கண்களுக்கு வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஓர் இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெறுகிறது. எனவே, வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
கண்களை சுற்றியுள்ள தோலில் சாதாரண கிரீம்களை பயன்படுத்தாமல் அதற்கான சிறப்பு கிரீம்களை பயன்படுத்த வேண்டும். வெளியில் செல்லும் முன்பு சன்ஸ்கிரீன், தரமான சன் கிளாஸ் அணிவது நல்லது.
கண்களின் ஆரோக்கியத்தைப் பேண சுத்தமான தண்ணீரில் கண்களை அடிக்கடி கழுவ வேண்டும். சாதாரண மையில் ஆரம்பித்து ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்கரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டும்.
எல்லாவற்றையும்விட இரவில் சீக்கிரத்தில் தூங்கி, அதிகாலையில் எழுவது கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.