பிறர் சொல்

ஒரு காட்டில் ஒரு காகம் இருந்தது.அதன் அலகு சற்று வளைந்திருந்தது. அதனால் அந்தக் காக்கைக்குத் தான் அழகில்லை என்ற எண்ணம் இருந்தது.பிற காக்கைகள் தன்னைக் கேலியாகப் பேசுவதுபோல அதற்கு தோன்றியது.எந்தக் காக்கையுடனும் அது பழகுவதில்லை.ஒரு நாள் புதிதாக ஒரு காக்கை அப்பகுதிக்கு வந்தது.அதன் அலகும் வளைந்துதான் இருந்தது.ஆனால் அக்காக்கை மிக மகிழ்ச்சியாக பறந்து திரிந்தது.இந்த காக்கை மட்டும் எப்படி இவ்வளவு அசிங்கமாக இருந்து கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்தக் காக்கையிடம் சென்றது.அப்போதுதான் தெரிந்தது அந்தக் காக்கைக்கு காது கேட்காது என்பது. அப்போது இந்தக் காக்கைக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.அதன்பின் இந்தக் காக்கையிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டது.இப்போது எந்தக் காக்கையைப் பற்றியும் அது கவலைப் படுவதில்லை.எல்லோரிடமும் அது நன்றாகப் பேச ஆரம்பித்தது.சில நாட்களில் அந்தப் பகுதிக்குத் தலைவராகி விட்டது.
ஒரு நாள் அந்த காக்கைக் கூட்டத்தின் பெருந்தலைவரான காக்கையிடம் அது பேச ஒரு
வாய்ப்பு கிட்டியது.அப்போது பெருந்தலைவர் கேட்டது,''நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,நீ முன்பெல்லாம் கோழையாய் யாருடனும் பழகாமல் இருந்தாயாமே?இப்போது எப்படி இங்கு புகழ் பெற்றாய்?''இந்த காகம் பதில் சொன்னது,''நான் மற்றவர்கள் பேசும் கேலிக்கு செவிடாய் இருக்கப் பழகிக் கொண்டேன்.அடுத்தவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் கேலி அவதூறுகளுக்கு நாம் செவி சாய்த்தாலொழிய அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை.பிறர் சொல்லுக்கு பயப்படுவதை உதறித் தள்ளி விட்டேன்.இப்போது எனக்கு எப்போதும் உற்சாகம் தான்.''என்றது பெரிய காக்கையும் அதைப் பாராட்டியது.அப்போதுதான் இக்காக்கை கவனித்தது,.பெரிய காக்கையின் அலகு தன் அழகை விட மோசமாக வளைந்திருந்தது.