Showing posts with label சிந்தனைக்கான கதைகள். Show all posts
Showing posts with label சிந்தனைக்கான கதைகள். Show all posts

ஈர்ப்பு

அரசன் ஒருவன் ஒரு வேலைக்காரியைக் காதலித்தான்.ஆனால் அந்த வேலைக்காரியோ ஒரு வேலைக்காரனைக் காதலித்தாள்.இது தெரிந்த அரசன் வேதனைப்பட்டு அவர்களைப் பிரிக்க,வேலைக்காரனை நாடு கடத்தலாம அல்லது சிறையில் அடைகலாமாஎன்று தன அமைச்சரிடம் கேட்டார்.
அமைச்சர் சொன்னார்,''பிரிவு என்றுமே ஆர்வத்தை ஆவேசமாகக் கிளரும்.இருவரும் தூர இருந்து ஒருவரை ஒருவர் இப்போது பார்த்துக் கொண்டிருப்பதனால்தான் இந்த ஈர்ப்பு.அருகருகே வைத்தால் ஈர்ப்பு தானே ஓடி விடும்.இரண்டு போரையும் நிர்வாணமாய் நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்குமாறு கட்டிப் போடுங்கள்,''என்றார்.அவ்வாறே செய்யப்பட்டது.இரண்டு நாட்கள் கழிந்ததும்  கட்டவிழ்க்கப்பட்டது.அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க விரும்பாமல் வெவ்வேறு திசைகளில் ஓட்டம் பிடித்தனர்.
தேடிச்சென்று அடைவதில் உள்ள சுகம் அடைந்த பின்னர் இருப்பதில்லை.இன்றைய அதீத விருப்பம்தான் நாளைய வெறுப்பாகும்.

எது வேண்டும் ?

கணவனும் மனைவியும் கடைவீதி சென்று ஆசைப்பட்ட பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு தங்கள் காரில் வீட்டிற்கு வந்தனர்.இருவரும் களைப்புடன் இருந்ததால் காரிலிருந்து எதையும் இறக்காமல் காரை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு படுக்க சென்று விட்டனர்.காலையில் எழுந்து பார்த்தால் காரைக் காணோம்.சுற்றிமுற்றித் தேடி  பார்த்தும் கிடைக்காதலால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.தனக்கு பிடித்த பொருட்கள் மற்றும் சில ஆவணங்கள் காரில் இருந்ததால் மனைவி மிகவும் சோகத்தில் இருந்தார். கணவன் சொன்னான்,''அன்பே,எப்படியும் காரும் பொருட்களும் காணாமல் போய்விட்டன.இப்போது நம்முன் இரண்டு விஷயங்கள் தான் இருக்கின்றன.ஒன்று கார் போனதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியது அல்லது அதை மறந்து மகிழ்வுடன் அடுத்த வேலையைப் பார்ப்பது நீ என்ன சொல்கிறாய்?''கணவனின் ஆறுதல் மனைவிக்கு இதமாக இருந்தது''மகிழ்வுடனே இருப்போம்,டார்லிங்,''என்றார்.
ஒரு மாதம் கழித்து கார் மட்டும் கிடைத்தது.ஆனால் முன் பகுதி இடித்து சேதம் ஆகி இருந்தது.டயர் ஒன்று வெடித்திருந்தது.கணவன் காரை இந்த நிலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்து,''இதை சரி செய்ய குறைந்தது இருபது ஆயிரம் ஆகுமே.எவ்வளவு அழகான வண்டி!இப்படி ஆகிவிட்டதே,''என்று புலம்பினான்.மனைவி சொன்னார்,''அன்பே,இப்போது நம்முன் இரு விஷயங்கள்தான் உள்ளன.ஒன்று,ஐயோ,கார் இப்படி ஆகி விட்டதே என்று கவலைப்படுவது அல்லது ஆனது ஆகட்டும்,இப்போது மகிழ்வுடன் அடுத்து காரியத்தை ஆரம்பிக்கலாம்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?கணவன் சிரித்துக்கொண்டே,''சந்தோசமாகவே இருப்போமே,''என்றான்.
எந்த சூழ்நிலையிலும் மகிழ்வுடன் இருப்பதோ,கவலையுடன் இருப்பதோ,உங்கள் சாய்ஸ்.

தகுதி

ஆற்று வெள்ளத்தில் ஒரு சிறுவன் அடித்து செல்லப்பட்டான்.அப்போது ஒருவர் தன உயிரைப் பற்றிய அச்சம் இல்லாது ஆற்றினுள் குதித்து அச்சிறுவனைக் காப்பாற்றினார்.சிறுவன் தன நிலைக்கு வந்தவுடன் தன்னைக்  காப்பாற்றியதற்கு அவரிடம் நன்றி சொன்னான்.அப்போது அவர் சொன்னார்,''அது பரவாயில்லை நீ நன்றி சொல்ல வேண்டியதில்லை.நான் உன்னைக் காப்பாற்றியது சரியான செயல் என்பதை நிரூபிக்கும் வகையில் உன் வாழ்வை நீ அமைத்துக் கொண்டால் அதுவே போதும்.

மதிப்பு ,மரியாதை

ஒரு நிறுவனத்தில் முப்பது வயதை ஒட்டிய அதிகாரிகளுக்கு ஒரு பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது.அப்போது வகுப்பு எடுத்தவர் சொன்னார்,''உங்களுக்கு சிலர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருக்கும்.ஆனால் இதை நீங்கள் சரியான முறையில் வெளிப்படுத்தாமல் உங்கள் உறவு இறுக்கமாக இருக்கக் காரணமாகி விடுகிறீர்கள்.இதை நீங்கள் முயற்சி செய்து பார்த்துவிட்டு அதன் பலனை அடுத்த மாத வகுப்பில் சொல்லலாம்,''அடுத்த வகுப்பில் யாருக்காவது இது சம்பந்தமான அனுபவம் ஏதாவது ஏற்பட்டதா என்று விசாரித்தார்.அப்போது ஒருவர் சொன்னார்,''நீங்கள் இந்த விஷயத்தை சென்ற வகுப்பில் சொன்னபோது எனக்கு முட்டாள்தனமாகப் பட்டது.உங்கள் மீது எரிச்சல் கூட ஏற்பட்டது.ஆனாலும் நான் அதை முயற்சி செய்து பார்க்க விரும்பினேன்.எனக்கு என் தந்தையின் மீது மிக்க மதிப்பும் மரியாதையும் உண்டு.ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சிறு மன வருத்தத்தில் நான் அவரைப் பார்ப்பதும் இல்லை பார்த்தால் பேசுவதும் இல்லை.இப்போது அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பை தெரியப்படுத்த விரும்பினேன்.அன்றே அவருக்கு தொலைபேசி மூலம் அவர் வீட்டிற்கு வருவதாகச் சொன்னேன்.அவர் கோபத்துடன் எதற்கு வருகிறாய் என்று கேட்டார்.நானும்,'உங்களிடம் சிறிது நேரம் பேச வேண்டும் அலுவல் முடிந்ததும் மாலை ஆறு மணிக்கு வருகிறேன்,'என்று சொல்லி தொலைபேசியை வைத்து விட்டேன்.மாலை ஆறு மணிக்கு மனம் திக் திக் என்று அடிக்க என் தந்தை இருந்த வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினேன்.என் தந்தையே வந்து கதவைத் திறந்தார்.அவர் முகம் இறுக்கமாக இருந்தது.நான் வந்ததை விரும்பாததுபோல அவருடைய தோற்றம் இருந்தது.அப்போது நான் சற்றும் அவர் எதிர்பாராத வண்ணம்,'அப்பா,நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.உங்கள் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.இதை சொல்லத்தான் வந்தேன்' என்றேன்.உடனே அங்கு ஒரு அதிசயம் நடந்தது.என் தந்தையின் முக இறுக்கம் படிப்படியாய்க் குறைந்து முகத்தில் ஒரு புன்முறுவல்  தோன்றியது.உடனே அவர் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,'நானும் உன்னை மிக நேசிக்கிறேன்.ஆனால் அதை சொல்லத்தான் எனக்கு இதுவரை தெரியவில்லை,'என்றவர் என்னை நீண்ட  நேரம் விடாமல் அணைத்தபடியே இருந்தார்.இக்காட்சியை என் தாய் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார்.அதன்பின் இரண்டு நாட்களில் என் தந்தை மாரடைப்பால் காலமாகி விட்டார்.நான் மட்டும் அன்று அவரைப் பார்க்காமல் இருந்திருந்தால் வாழ் நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் இருந்திருப்பேன்.உங்களுக்கு என் நன்றி,''என்றார்.

யாருக்குப் பரிசு?

மன அழுத்தம் அதிகம் உள்ள பெரிய அதிகாரிகளுக்கு மகிழ்வுடன் வாழ பயிற்சி முகாம் ஒன்றினைப் பேராசிரியர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார்.அப்போது பயிற்சியில் கலந்து கொண்ட நாற்பது பேருக்கும் ஒரு ஊதிய பலூனும் ஒரு ஊசியும் கொடுத்துவிட்டு சொன்னார்,''இப்போது ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.இப்போது உங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பலூனும் ஊசியும் உள்ளது.இருபது நிமிடம் கழித்து யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ,அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு,''அடுத்த நொடியே அனைவரும் குதூகலத்துடன் தங்கள் பலூனை ஒரு கையில் உயரப் பிடித்துக் கொண்டு அடுத்த கையில் ஊசியை வைத்து அடுத்தவர் பலூன்களை உடைக்க முயற்சித்தனர்.சிறுவர்களைப் போல அவர்கள் ஓடியும்,தாவியும்,நாற்காலிகளின் மேல் ஏறியும் இந்தப் போட்டியைத் தொடர்ந்தனர்.இருபது நிமிடம் ஆயிற்று.அப்போது ஒரே ஒருவரின் பலூன் மட்டும் உடையாதிருந்தது.அவர் குழந்தையைப்போல ஆர்ப்பரித்தார்.பேராசிரியர் எல்லோரிடமும் கேட்டார்,''பலூன் உடையாது வைத்திருக்கும் இவரை வெற்றியாளராக அறிவித்துப் பரிசினைக் கொடுத்து விடலாமா?''என்று கேட்டார்.எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர்.அப்போது அவர்,''பரிசு கொடுக்குமுன் ஒரு கேள்வி.நான் முதலில் என்ன சொன்னேன்?பலூன் உடையாமல் வைத்திருப்பவருக்கு பரிசு என்று தானே சொன்னேன்?ஒவ்வொருவரும்  அடுத்தவர் பலூன்களைப் பார்க்காமல்,தன பலூனை மட்டும் உடையாமல் பாதுகாத்திருந்தால் இப்போது அனைவருக்கும் பரிசு கிடைத்திருக்குமே!''என்று சொன்னவுடன் ஒவ்வொருவருக்கும் சிறு குற்றம் செய்த உணர்வு ஏற்பட்டது.பேராசிரியர் தொடர்ந்தார்,''இப்படித்தான் வாழ்விலும்,நாம் நம்மிடம் உள்ளதைக்  கவனித்து முறைப்படி வாழ்ந்தாலே நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கலாம்.ஆனால் நாம் அடுத்தவர்களையே கவனித்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு,அவர்களை அழிக்க,ஒடுக்க முயற்சித்து நம் மகிழ்ச்சியைக் காணாமல் போக்கி விடுகிறோம்.''

பயிற்சி

ஒரு படித்த பெண் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் வேலை தேடி விண்ணப்பித்து வந்தாள்.அவளுடைய தோழிகள் சொன்னார்கள்,''நீ இப்பொழுது தான் படித்து முடித்திருக்கிறாய்.உனக்குப் பெரிய நிறுவனங்களில் வேலை கொடுக்க மாட்டார்கள்.முதலில் சிறிய நிறுவனங்களில் வேலை பார்த்து அனுபவம் பெற்ற பின் பெரிய நிறுவனங்களுக்கு முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்''.ஆனால் அதையெல்லாம் அவள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது.அங்கு பேட்டியின்போது ,''முன்  அனுபவம் உனக்கு ஏதுமில்லையே?''என்று கேட்டார்கள்.அதற்கு அவள் சொன்னாள்,''எனக்கு அனுபவம் இல்லை என்பதால்தான் உங்கள் நிறுவனத்திற்கு  வேலை தேடி வந்தேன்.அனுபவம்  பெற உங்கள் நிறுவனமே சிறந்தது.இங்கு கிடைக்கும் அனுபவம் வேறு எங்கும் கிடைக்காது.சிறு நிறுவனங்களுக்கெல்லாம் போய்  என் திறமையை வீணடிக்க நான் விரும்பவில்லை.உங்கள் நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் கூட பயிற்சி பெறத்  தயாராக இருக்கிறேன்.''அவள் தன்னம்பிக்கைக்கு அந்த பெரிய நிறுவனத்திலேயே சம்பளத்துடன் வேலை கிடைத்தது.

நீ நீயாக இரு.

'இராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரரின் தலை மீது கைவைத்துத் தடவி ஆசிர்வாதம் செய்ததும் அவர் விவேகனந்தர் ஆனார்,'என்பதனைப் படித்துத் தெரிந்த ஒருவர் விநோபாஜியிடம் சென்று ,''அய்யா,தாங்கள் என் தலை மீது கைவைத்து ஆசிர்வாதம் செய்தால் நான் சங்கராச்சாரியார் ஆகிவிடுவேன்.தயை புரியுங்கள்,''என்று சொன்னார்.அதற்கு வினோபாஜி  சொன்னார்,''நான் ஆக்குவதால் நீ ஆகிவிட்டால்,பிறர் அழிப்பதால் நீ அழிந்தும்  போய் விடுவாய்.என்னைக் காட்டிலும் தவ வலிமை மிகுந்தவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.எனவே நீ நீயாகவே இரு.எவராவது உன்னை எதாகிலும் ஆக்கினால் நீ அப்படி ஆகிவிடாதே.''

ஞானம்

ஞானம் பெற விரும்பிய ஒருவன் இறைவனிடம் சென்று ஞானம் பெற வழி  கேட்டான்.இறைவன் சொன்னார்,''அப்பா,இப்போது வெயில் மிக அதிகமாக இருப்பதால் தாகம் எடுக்கிறது எனக்கு முதலில் நீ கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,''அவனும் ஓடிச் சென்று முதலில் தென்பட்ட வீட்டின் கதவைத் தட்டினான்.ஒரு அழகிய இளம்பெண் கதவைத் திறந்தாள்.அவளைப் பார்த்தவுடன் அவனுக்கு அந்தப்பெண் மீது காதல் பிறந்தது.அந்தப் பெண்ணும்  சம்மதிக்கவே அவளைத் திருமணம் செய்து கொண்டு நான்கு பிள்ளைகளையும் பெற்றான்.ஒரு நாள் கடுமையான மழை பெய்தது.எங்கு பார்த்தாலும் தண்ணீர்.வீடுகள் அடித்து செல்லப்பட்டன.அவனும் தன மனைவியையும் குழந்தைகளையும் கையில் பிடித்துக்கொண்டு சென்றான் அப்படியிருந்தும் அவர்களைத் தண்ணீர் இழுத்துச் சென்று விட்டது.அடுத்து அவனையும் தண்ணீர் இழுத்தபோது,''கடவுளே,என்னைக் காப்பாற்று,''என்று கத்தினான்.அப்போது இறைவன் அவனிடம் கேட்டார்,''அப்பா,தாகத்துக்கு தண்ணீர் கேட்டேனே,என்ன ஆயிற்று?''

தர்மம்

பதிமூன்று ஆண்டு காலம் வனவாசம் என்று காட்டில் பொறுமையாக இருந்த தர்மரைப் பார்த்து பாஞ்சாலி துளைத்தெடுத்தாள்,''பதிமூன்று ஆண்டுகள் காத்திராமல் இடையில் நீர் போய் ஏன் துரியோதனனைக் கொல்லக் கூடாது? சத்தியம்,பொறுமை என்று தர்மத்தைக் கட்டி அழுகிறீரே,நீர் காப்பாற்றும் தர்மம் உம்மைக் காப்பாற்றவில்லையே?காட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டதே?''தர்மர் அமைதியாகச் சொன்னார்,''பெண்ணே,தர்மம் என்னைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் நான் தர்மத்தைக் காப்பாற்றவில்லை.  அப்படிச் செய்தால் அது வியாபாரம்.நான் தர்ம வியாபாரி அல்ல.தர்மத்தைக் காப்பது என் பிறவிக்கடன்.தர்மங்கள் என்னைக் காத்தாலும்,காக்காது போனாலும் அவற்றைக் காப்பது என் கடமை.அதிலிருந்து நான் நழுவவே முடியாது.''

அச்சம்

அந்நிய நாட்டின் மீது இருமுறை போர் தொடுத்து வெற்றி கண்ட ஒரு மன்னன்,தோற்றவன் எந்த நேரமும் பழி வாங்கலாம் என்ற அச்சத்தில் இருந்தான்.ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடப்போனான்.துறவி ஒருவரை சந்தித்தான்.துறவியிடம் தன பிரச்சினை குறித்து சிறிது நேரம் பேசி விட்டு, ''உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?''எனக் கேட்டான்.''என்னுடைய அடிமையின் அடிமை நீ.நீ எனக்கு எப்படி உதவ முடியும்?''என்று கேட்டார் துறவி.வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு,''எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?''என்று கேட்டான்.துறவி சொன்னார்,''என்னிடம் ஒரு அடிமை இருக்கிறான்.அவன் உனக்கு எஜமானன்,''மன்னனும்,''உங்களிடம் அடிமையாயிருப்பது யார்?''எனக் கேட்டான்.''அச்சம் ''என்றார் துறவி.தலை குனிந்தான் மன்னன்.பதவியில் இருப்பவர்கள் பயத்துக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.அந்த அச்சத்தின் காரணமாகவே பதவியையும் விடாமல்  பற்றிக் கொள்கிறார்கள்.

வேலைக்காரன்

ஒரு அரசன் பதவி அகங்காரத்தில் சொன்னான்,''நான் தான் உலகுக்கே அதிபதி.அனைவரும் எனக்கு வேலைக்காரர்கள்.''அப்போது ஒரு வயது  முதிர்ந்த பெரியவர் ஒருவர்,'இல்லை,உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்கள்தான்.யாரும் அதிபதி கிடையாது.''என்று சொன்னார்.அரசன்,''யாரது?''என்று கேட்க முதியவர் முன் வந்தார்.அரசன்,''நீ இப்போது சொன்னது என்னையும் சேர்த்தா?''என்று கேட்க முதியவர் ஆம் என்று சொன்னார்.அரசனுக்குக் கோபம் வ்நதுவிட்டது,''நீ யார்?உனக்கு என்ன வேண்டும்?''என்று கேட்க அந்த முதியவரும்,''எங்கள் ஊரில் குடிக்கத் தண்ணீர்  இல்லை.எங்கள் ஊரில் ஒரு கிணறு தோண்ட நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இங்கு வந்தேன்,''என்றார்.அரசன்,''நீயோ பிச்சைக்காரன் மாதிரி என்னிடம் வேண்டுகோளுடன் வந்துள்ளாய்.இந்த நிலையில் என்னையும் ஒரு வேலைக்காரன் என்று சொல்ல உனக்கு எவ்வளவு ஆணவம்?''என்று கத்தினான்.பெரியாவர்,''அதில் எந்த மாற்றமும் இல்லை.என்னால் அதை நிரூபிக்க முடியும்,''என்றார்.அரசன் சொன்னான்,''நீ மட்டும் அதை நிரூபித்து விட்டால் உங்கள் ஊருக்கு ஒன்றென்ன,மூன்று கிணறுகள் தோண்ட ஏற்பாடு செய்து தருகிறேன், ''என்றான்.முதியவர் ,''எங்கள்  ஊர்  வழக்கப்படி யாராவது ஒருவர் இன்னொருவரின் சவாலை ஏற்றுக் கொண்டால் அவரது பாதம் தொட்டு வணங்க வேண்டும்.உங்கள் சவாலை நான் ஏற்றுக் கொண்டதால் இப்போது நான் உங்கள் பாதத்தை வணங்கப் போகிறேன்.ஒரு நிமிடம் என் கைத்தடியைப் பிடித்துக் கொள்கிறீர்களா?''என்று சொல்ல அரசனும் முதியவரின் கைத்தடியைத் தன கையில் வாங்கிக் கொண்டான். முதியவரும் அரசனைப் பாதம் தொட்டு வணங்கிவிட்டு,''இப்போது என் கைத் தடியைத் திரும்பத் தருகிறீர்களா?''என்று கேட்க அரசனும் திரும்பக் கொடுத்து விட்டான். பெரியவர் ,''இதற்கு மேலும் நான் நிரூபிக்க வேண்டுமா?''என்று கேட்க அரசன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.முதியவர் சொன்னார்,''அரசே,நான் என் கைத்தடியைப் பிடியுங்கள் என்றதும் பிடித்தீர்கள்,திரும்பக் கொடுங்கள் என்றதும் கொடுத்தீர்கள்.நான் இட்ட வேலைகளை இப்போது நீங்கள்செய்யவில்லையா?அதனால்தான் சொல்கிறேன் இவ்வுலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே.''தன தவறை உணர்ந்த மன்னன் முதியவரின் கோரிக்கையை உடனே நிறைவேற்றினான்.

உழைப்பு தவம்

ஒரு விவசாயி தன நிலத்தில் கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது ஒருவர் அருகில் இருந்த குளத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டு கூழாங்கற்களை குளத்துக்குள் வீசிக் கொண்டு சும்மா பொழுதைப் போக்கிக் கொண்டிருந்ததைக்  கண்டார்.அவருக்கு எரிச்சல் உண்டாயிற்று.''நாம் கஷ்டப்படும்போது இவன் மட்டும் சோம்பேறித் தனமாய் பொழுதைப் போக்குகிறானே,''என்று எண்ணினார்.சில நாட்கள் கழித்து விவசாயி பக்கத்து நகரில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சிக்கு சென்றபோது ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை மட்டும் நூற்றுக் கணக்கானோர் ரசித்துச் செல்வதைக் கண்டார்.விவசாயியும் அந்த ஓவியத்தால் கவரப்பட்டு அந்த ஓவியரைக் காண விரும்பினார்.அந்த ஓவியர் வேறு யாருமல்ல. குளத்தங்கரையில் அன்று கல்லை வீசிக் கொண்டிருந்தவர்தான்.அந்த ஓவியம் குளத்தங்கரையின் கவிதை மயமான சூழ்நிலை தோற்றத்தை காட்டியது.அதை வரையத்தான் அந்த ஓவியன் மணிக்கணக்காகக் குளத்தங்கரையில் காத்திருந்திருக்கிறான்.விவசாயி பாராட்டினான், ''அய்யா,நீங்களும் ஒரு உழைப்புத்தவத்தில் தான் இருந்திருக்கிறீர்கள்என்று எனக்கு இப்போது புரிகிறது.நீங்கள் உருவாக்கிய படைப்பு ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்விக்கிறது.என் வாழ்த்துக்கள்.''

சமயோசிதம்

புகை வண்டி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.வெளியே கையை நீட்டியபடி உட்கார்ந்திருந்த ஒருவரின் விலை உயர்ந்த கைக் கடிகாரம் கழன்று விழுந்து விட்டது.அவர் பதறித் துடித்து படாதபாடு பட்டார்.இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் எதிர் சீட்டில் அமர்ந்து  பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர்.அவர் எந்த வித சலனமுமின்றி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.அடுத்த ரயில் நிலையம் வந்தது.அவரைப் பார்க்க நிறைய அதிகாரிகள் வந்தனர்.அப்போது அவர் ஒரு அதிகாரியிடம் சொன்னார்,''இந்த இடத்திலிருந்து இருபது தந்திக் கம்பங்களுக்குப் பின்னால் ஒரு இடத்தில் இவரது விலை உயர்ந்த கைக் கடிகாரம் கீழே விழுந்து விட்டது.அதைத் தேடிக் கண்டுபிடித்து இவரிடம் சேர்ப்பித்து விடுங்கள்.''அந்தப் பெரியவர் ராஜாஜி. ஒரு பதட்டமான சூழ்நிலையில் சமயோசிதமாக அவர் செய்த காரியம் அங்கு  இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

நம்மால்தான்..

ஒரு கணவன் தன மனைவி,குழந்தையுடன் தன மாமனார் ஊருக்கு காரில் செல்லும்போது பாதை தவறி நேரமாகிவிட்டது.சரியான பாதை கண்டு பிடித்து செல்கையில் வழியில் இஞ்சின் நின்று விட்டது.உடனே கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் குறை கூறி ஒருவரை ஒருவர் திட்ட ஆரம்பித்தார்கள்.குழந்தை இடைமறித்து,''நேரமாகுதே!சண்டை போடுவதற்குப் பதிலாக ஒருவர் தள்ள ஒருவர் ஸ்டார்ட் பண்ணினால் வண்டி ஓடுமே ,''என்று சொல்ல,மனைவி காரைத் தள்ள கணவன் ஸ்டார்ட் செய்தான்.குழந்தையும் காரினுள் உட்கார்ந்தவாறே தன கையினால் முன் இருக்கையை தள்ளுவதுபோல முயற்சி செய்தது.இஞ்சின்  ஓட ஆரம்பித்தது.குழந்தை கைகொட்டிச் சிரித்துக் கொண்டே,''நான் தள்ளியதால்தானே கார் ஓடுகிறது?''என்று கேட்டது.இந்தக் குழந்தை போலத்தான் நாம் ஏதாவது செய்துவிட்டு நம்மால்தான் அந்தக் காரியம் முடிந்தது என்று நினைக்கிறோம்.கூறிக் கொண்டு அலைகிறோம்.

பூவா,தலையா?

ஏதாவது முக்கியமான பிரச்சினைக்கு முடிவு காண இயலாத சூழ்நிலையில் ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிவிட்டு பூவா தலையா என்று பார்த்து முடிவெடுக்கும் பழக்கம் அனேகரிடம் உண்டு அல்லவா?இந்தப் பழக்கம் எப்படி வந்தது?இதற்கு காரணகர்த்தா யார்?உளவியலின் தந்தை சிக்மன்ட் பிராய்ட் தான், முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த தன நண்பர்களுக்கு
இந்த வழியை சொல்லிக் கொடுத்தவர்.இதை மூடப் பழக்கம் என்று நிறையப் பேர் நினைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு யோசனையை எப்படி ஒரு பெரிய அறிஞரான பிராய்ட் சொன்னார்.ஒரு நாணயம் ஒரு மனிதனின் பிரச்சினைக்கு முடிவு காண்பதா?இந்தக் கேள்விக்கு  அவரே விடை சொன்னார்.  ''ஒரு மனிதன் முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒரு நாணயத்தை சுண்டிப் பார்க்க வேண்டும்.அவன் பூ என்று நினைத்து பூவே விழுந்து விட்டால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதா ,வருத்தம் ஏற்படுகிறதா என்று அவனே கவனித்துப் பார்க்க வேண்டும்.மகிழ்ச்சி ஏற்பட்டால் அந்தக் காரியத்தை செய்யலாம்.வருத்தம் ஏற்பட்டால் அதை நிறுத்தி விடலாம்.தலை விழுந்தாலும் இதே லாஜிக் தான்.''இப்போது சொல்லுங்கள்,இது மூடப்பழக்கமா?சரியான முடிவை எடுக்க ஒரு சரியான வழிதானே!

எது அழகு?

அக்பர் ஒரு முறை,அவருடைய நாட்டிலேயே அழகு மிகுந்த ஒரு மனிதனைப் பார்க்க விரும்பினார்.அப்படிப்பட்ட மனிதனைக் கண்டு பிடிப்பவருக்க தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறினார்.அரசவையில் இருந்த பலரும் பல பேரை  கூட்டி வந்தனர்.ஆனால் மன்னருக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள் பீர்பால் ஒரு பிச்சைக் காரனையும் அவனுடைய மகனையும் அழைத்து வந்தார்.அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருந்தனர்.அக்பருக்குக் கோபம் வந்து விட்டது.பீர்பால் தண்ணி அவமதித்து விட்டதாகக் கருதினார்.அவர் முகக் குறிப்பினைக் கண்ட பீர்பால் அமைதியாகச் சொன்னார்,''இந்தத் தந்தை உலகிலேயே தன் மகன் தான் மிகுந்த அழகுள்ளவன் என்று கருதுகிறார்.ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைதான் உலகில் அழகு  என்று கருதுகின்றனர்.இதை யாரேனும் மறுக்க முடியுமா?''

கரும்பாக இரு

தன் மகன் சோம்பேறியாகவும்,பொறுப்பு இல்லாதவனாகவும்  இருப்பதைக் கண்ட ஒரு தந்தை அவனை அவ்வூரில் உள்ள பெரியவரிடம் அழைத்துச் சென்று அவனுக்கு அறிவுரை கூறுமாறு வேண்டினார்.பெரியவரும் சிறுவனிடம்,''கரும்பாக இரு''என்றார்.பின் அதன் பொருளையும் பொறுமையாக விளக்கிச் சொன்னார்.சிறுவன் மறுநாள் எல்லோரிடமும் அன்பாகப் பேசினான்.கடுஞ்சொல் தவிர்த்தான்.அவனுடைய இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்த தந்தை ஒரு வாரம் கழித்து மறுபடியும் அவனை அப்பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.அவனும் மகிழ்ச்சியுடன் அவரைப் போய்ப் பார்க்க அவர்,''எறும்பாக இரு,''என்றார்.அதன் பொருள் தெரிந்து கொண்ட அவன் சுறுசுறுப்பாக செயல் பட ஆரம்பித்தான்.சோம்பேறியாக இருந்த அவன் சுறு சுறுப்பானதும் அவனுக்கு பள்ளியிலும்,நண்பர்களிடமும்,உறவினர்களிடமும் நல்ல பெயர் வந்தது.எல்லோரும் அவனை பாராட்டவும் அவனுக்கு சிறிது தலைக் கனம் ஏற்பட்டது.மீண்டும் அவன் தந்தை பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னபோது அது தேவையில்லை என மறுத்தான். பின் அவர் வற்புறுத்தலுக்காக அவன் பெரியவரிடம் சென்றான்.அவன் முகத்தில் தோன்றிய கர்வ குறிப்பினைக் கண்ட பெரியவர் இம்முறை,''துரும்பாக இரு,''என்றார்.அதன் பொருள் அறிந்த சிறுவன் தன தவறை உணர்ந்து செயல்பட்டு நல்ல பெயர் எடுத்தான்.

மாபாவி.

நாடகக் கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள்.ஒரு முறை அவர் மதுரையில் கோவலன் கண்ணகி நாடகம் போட்டார்.நாடகத்தில் கண்ணகி கோவலனைப் பார்த்துப் பாடுகிறார்:''மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு, மன்னா   இன்று போகாதீர்.''
நாடகம் பார்க்க வந்திருந்தோர் கூச்சலிட ஆரம்பித்தனர்
,''நம் ஊருக்கு வந்து நம் ஊரையே பழித்துப் பாடுவதா?''என்பதே அவர்களது ஆதங்கம்.சுவாமிகள்  உடனே மேடைக்கு வந்து முதலில் எல்லோரையும் அமைதிப்படுத்தி விட்டு பின் பேசினார்,''என்னுடைய பாடலை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.'மா' என்றால் திருமகள் என்று பொருள்.'பா'என்றால் கலைமகள் என்று பொருள்.'வி'என்றால் மலைமகள்.மாபாவியோர் என்றால் திருமகளும்,கலைமகளும்,மலைமகளும் ஆகிய மூவரும் என்று பொருள். இந்த மூன்று பெரும் வாழ்கின்ற பெருமையுடைய மதுரையில் நான் அணிந்து கொள்ளும் இந்த சாதாரண சிலம்பை யார் வாங்குவார்கள் என்ற எண்ணத்துடன் கண்ணகி பாடுவதாக நான் எழுதியுள்ளேன்.மதுரையைப் பழிக்கும்எண்ணம் கொஞ்சம் கூட எனக்குக் கிடையாது.,''இதைக் கேட்ட எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்களாம்.

பிறர் சொல்

ஒரு காட்டில் ஒரு காகம் இருந்தது.அதன் அலகு சற்று வளைந்திருந்தது. அதனால் அந்தக் காக்கைக்குத் தான் அழகில்லை என்ற எண்ணம் இருந்தது.பிற காக்கைகள் தன்னைக் கேலியாகப் பேசுவதுபோல அதற்கு தோன்றியது.எந்தக் காக்கையுடனும் அது பழகுவதில்லை.ஒரு நாள் புதிதாக ஒரு காக்கை அப்பகுதிக்கு வந்தது.அதன் அலகும் வளைந்துதான் இருந்தது.ஆனால் அக்காக்கை மிக மகிழ்ச்சியாக பறந்து திரிந்தது.இந்த காக்கை மட்டும் எப்படி இவ்வளவு அசிங்கமாக இருந்து கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்தக் காக்கையிடம் சென்றது.அப்போதுதான் தெரிந்தது அந்தக் காக்கைக்கு காது கேட்காது என்பது. அப்போது இந்தக் காக்கைக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.அதன்பின் இந்தக் காக்கையிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டது.இப்போது எந்தக் காக்கையைப் பற்றியும் அது கவலைப் படுவதில்லை.எல்லோரிடமும் அது நன்றாகப் பேச ஆரம்பித்தது.சில நாட்களில் அந்தப் பகுதிக்குத் தலைவராகி விட்டது.
ஒரு நாள் அந்த காக்கைக் கூட்டத்தின் பெருந்தலைவரான காக்கையிடம் அது பேச ஒரு
வாய்ப்பு கிட்டியது.அப்போது பெருந்தலைவர் கேட்டது,''நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,நீ முன்பெல்லாம் கோழையாய் யாருடனும் பழகாமல் இருந்தாயாமே?இப்போது எப்படி இங்கு புகழ் பெற்றாய்?''இந்த காகம் பதில் சொன்னது,''நான் மற்றவர்கள் பேசும் கேலிக்கு செவிடாய் இருக்கப் பழகிக் கொண்டேன்.அடுத்தவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் கேலி அவதூறுகளுக்கு நாம் செவி சாய்த்தாலொழிய அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை.பிறர் சொல்லுக்கு பயப்படுவதை உதறித் தள்ளி விட்டேன்.இப்போது எனக்கு எப்போதும் உற்சாகம் தான்.''என்றது பெரிய காக்கையும் அதைப் பாராட்டியது.அப்போதுதான் இக்காக்கை கவனித்தது,.பெரிய காக்கையின் அலகு தன் அழகை விட மோசமாக வளைந்திருந்தது.

எடுக்கவோ,கோர்க்கவோ?

மகா பாரதத்தில் கர்ணனும் துரியோதனன் மனைவி பானுமதியும்   சொக்கட்டான்   ஆடிக் கொண்டிருந்தபோது,துரியோதனன் வரவே பானுமதி எழ,தான் தோற்கப்போகிறோம் என்று பயந்து அவள் எழுகிறாள் என்றெண்ணி கர்ணன் அவள் மேகலையைப் பிடித்திழுக்க முத்தெல்லாம் தரையில் சிதற ,துரியோதனன்,''எடுக்கவோ,கோர்க்கவோ?''என்று கேட்ட கதை அனைவருக்கும் தெரியும்.இந்தக் கேள்வியில்தான் ஒரு சந்தேகம்.துரியோதனன் கர்ணனிடம் இருந்த நட்பின் காரணமாக சிதறிய முத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து பின் அதைக் கோர்த்து ஆபரணமாக்கும் வேலையை அரண்மனையில் இருந்த யாரிடமாவது  கொடுத்திருக்கலாம் அல்லவா?வெறுமே ,''எடுக்கவா?''என்ற கேள்வியோடு முடித்திருக்கலாமே?கூடுதலாக ஏன் ''கோர்க்கவா?''என்று கேட்டான்.இந்த சந்தேகம்  நிறையப் பேருக்கு வந்தது.அப்போது அங்கு வந்த சகாதேவனிடம் நடந்ததைக் கூறி விளக்கம் கேட்டனர்.சகாதேவன் சொன்னது:
''ஒருவனுக்கு பயம் அதிகம் வந்து விட்டால் அவன் கை,கால் நடுங்கும்.அதேபோல ஆத்திரப்படுபவனுக்கும் கை கால் நடுங்கும்,உதறும். இந்த சம்பவத்தில் துரியோதனன் தவறாக எண்ணிவிடுவானே என்ற பயத்தில் கர்ணனுக்கும்,பானுமதிக்கும் கை,கால் நடுங்குது.துரியோதனனுக்கு ஆத்திரம் ஏற்பட்டிருந்தால் அவனது கை,காலும் நடுங்கியிருக்க வேண்டும்.ஆனால் அவன் நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தான்.என்ன காரணம்?அவன் தன் மனைவியையும்,நண்பனையும் சந்தேகப் படவில்லை.முத்துக்களைக் கோர்க்க கை நடுங்கக் கூடாது.அவனுக்கு ஆத்திரம் இல்லை.நம்பிக்கை இருக்கிறது.அவன் கை நடுங்கவில்லை.எனவே அவனால் முத்துக்களை எடுக்கவும் முடியும்;கோர்க்கவும் முடியும்.அதனால்தான் அவன்   'கோர்க்கவோ' என்ற கேள்வியையும் சேர்த்துக் கேட்டிருக்கிறான்.''
                                                 --தென்கச்சி சுவாமிநாதன் .