கைங்கர்யம்

திருப்பதியில் பெருமாளுக்கு பூக்கட்டும் திருப்பணி செய்தவர் அனந்தாழ்வார்.அனந்தன் என்றால் பாம்பைக் குறிக்கும்.ஆதிசேடன் பெயர் தாங்கிய அடியவரே அனந்தாழ்வார்.ஒரு நாள் பூக்களைத் தொடுக்கும்போது பாம்பு ஒன்று அவர் விரலைத் தீண்டியது.அனால் அவர் பதறாது தன் பணியினைத் தொடர்ந்தார்.பூமாலை கட்டி பெருமாள் தோளில் சாத்தப்போனார்.பெருமாள் பதறினார்,''அனந்தா,பாம்பு உன்னைக் கடித்துள்ளது.''நிதானமாக அனந்தாழ்வார் சொன்னார்,''ஸ்வாமி,கடித்த பாம்புக்கு விஷம் அதிகம் என்றால் கைங்கர்யம் அங்கே.கடியுண்ட பாம்புக்கு(இந்த அனந்தருக்கு)விஷம் அதிகமானால் கைங்கர்யம் இங்கே.இதில் எனக்கு என்ன கவலை?''