Showing posts with label ஞானக் கதைகள். Show all posts
Showing posts with label ஞானக் கதைகள். Show all posts

வைரக்கல்

கபீர் மிகச்சிறந்த ஞானியாக விளங்கியவர்.அவரது மகன் பெயர் கமால்.கபீர் எல்லாவற்றையும் உதறித் தள்ளியவர்.அவருக்கு இந்த உலகில் எதுவும் தேவைப்படவில்லை.யார் காணிக்கை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.ஆனால் அவர் மகன் கமால் ஏற்றுக் கொள்வார்.இது கபீருக்குப் பிடிக்கவில்லை.எனவே காணிக்கைகளை ஏற்க வேண்டாம் என்று மகனுக்கு அறிவுரை கூறினார்.கமால் கேட்டார்,''செல்வம் அர்த்தமற்றது என்றால் அதை வேண்டாம் என்று சொல்ல என்ன அவசியம் வந்தது?நாம் தேடிச் செல்ல வேண்டாம்.வந்தால் அதை வேண்டாம் என்று சொல்வதும் அதற்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றதுதானே?கபீருக்கு இந்த வாதம் ஏற்புடையதாக இல்லை எனவே தன மகனை வெளிய போகச் சொன்னார்.கமாலும் தனியாகச்சென்று ஒரு குடிசையில் தங்கினார்.
கபீரைக் காண வந்த காசி அரசன்,விபரம் கேள்விப்பட்டு கமாலைப் பார்க்கச் சென்று ஒரு விலை மதிப்பற்ற வைரத்தை அவர் காலடியில் வைத்து வணங்கினான்.''ஒரு கல்லை எதற்குக் கொண்டு வந்தாய்?''என்று கமால் கேட்க திகைத்துப்போன அரசன் அதைத் திரும்ப எடுத்துச் செல்ல முனைந்தான்.''அது கல்தானே?அதை எடுத்துச் செல்ல ஏன் சிரமம்?அப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று நீ நினைத்தால்,இப்போதும் நீ அதை விலை உயர்ந்த வைரம் என்றே எண்ணுகிறாய் என்று அர்த்தம்,''என்றார் கமால்.கமால் வைரத்தை வைத்துக் கொள்வதற்காக சாதுரியமாகப் பேசுவதாக எண்ணினான் அரசன்.''சரி,இதை எங்கே வைப்பது?''என்று  கமாலிடம் அவன் கேட்டான்.''எங்கே வைப்பது என்று கேட்பதனால்,இதன் மீது உனக்கு இன்னும் மதிப்பு இருக்கிறது என்று பொருள்.ஆகவே வைப்பது என்ன,எங்காவது தூக்கி எறி,''என்றார் கமால்.அரசன் ஒன்றும் சொல்லாது வைரத்தை வாசலில் இருந்த பிறை இடுக்கில் சொருகினான்.கமால் அதை நிச்சயம் எடுத்துக் கொள்வார் என்று நம்பினான்.ஆறு மாதங்கள் கழித்து அவ்வழியே வந்த அரசன் கபீரைப் பார்த்து வணங்கி சிறிது நேரம் கழித்து வைரத்தை  கமால் என்ன செய்தார் என்று வினவ,கமாலுக்கு ஒன்றும்  புரியவில்லை.அரசன் உடனே வைரத்தைத் தான் வைத்த இடத்தில் தேட,அது அங்கேயே இருந்தது.கபீர் விருப்பு,வெறுப்பு,இச்சை,விரக்தி என்ற எல்லா நிலைகளையும் தாண்டிக் கடந்து விட்டார்.

கடவுள் எங்கே?

சூபி ஞானி அல்பயாஜித் தனது தவ பலத்தினால் நேரடியாக சொர்க்கம் போனார்.சொர்க்கத்தின் வாயிலில் எண்ணற்ற தேவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தினர்.அவர் ஆவலுடன் ''இறைவன் எங்கே?''என்று கேட்டார்.அவர்கள் வியப்புடன் கேட்டனர்,''என்ன,அவர் பூமியில் இல்லையா?''
**********
மொகலாய மன்னன் ஹுமாயுனின் உயிரை,தண்ணீர் மொண்டு ஊற்றும் காவலாளி ஒருவன் காப்பாற்றினான்.அதனால் மனம் மகிழ்ந்த மன்னன்,''உனக்கு என்ன வேண்டும் என்றாலும் கேள்,தருகிறேன்,''என்றான்.அதற்கு அந்தக் காவலாளி,''எனக்கு எதுவும் வேண்டாம்,மன்னா,''என்றான்.''உயர்ந்த பதவி ஏதாவது கொடுக்கட்டுமா?''என்று மீண்டும் மன்னன் கேட்டான்.காவலாளி மிகவும் மரியாதையுடன்,''நன்றி மன்னா,ஆனால் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் இந்தப் பணியை விட புனிதமானது உண்டா?''என்று கேட்க மன்னன் மனம் மகிழ்ந்தான்.
இயன்றதை செய்வது,செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்வது,உள்ளதைக் கொண்டு உவப்பது இவை யாவும் சூபிகளின் பண்பாகும்..
**********

குயில்

ஒரு குரு தினசரி காலையில் தன சீடர்களுக்கு போதனை செய்வதுண்டு.ஒரு நாள் காலை வழக்கம்போல தன போதனையை ஆரம்பித்தார்.அப்போது அங்கு அருகில் இருந்த ஒரு மரக்கிளையில் ஒரு குயில் வந்து அமர்ந்து கூவத் துவங்கியது.அந்த ரம்மியமான காலைப் பொழுதினிலே அந்தக் குயில் பாடியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.அனைவரும் அதன் இனிமையில் லயித்து விட்டனர்.சிறிது நேரம் பாடியபின் குயில் பறந்து சென்று விட்டது.குரு அப்போது சொன்னார்,''இன்றைய போதனை முடிந்துவிட்டது.''

ஊசியும் நூலும்

பார்வதியும் பரமசிவனும் வான வீதியில் சென்று கொண்டிருக்கையில் ஒரு வனத்தில் ஞானி ஒருவர் தன கிழிந்த ஆடையை ஊசி நூல் கொண்டு தைத்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.அவருக்கு ஏதேனும் வரம் கொடுக்க வேண்டும் என்று பார்வதி பரமசிவனை வேண்ட இருவரும் அவர் முன் நின்றனர். ஞானியும் அவர்களை வணங்கி அவர்கள் பசியாற தன்னிடமிருந்த காய்கனிகளைக் கொடுத்து அவர்கள் உன்ன ஆரம்பித்தவுடன் தொடர்ந்து உடைகளைத் தைக்க ஆரம்பித்தார்.உணவு உண்டு சிறிது நேரம் ஆகியும் ஞானி அவர்களைக் கண்டு கொள்ளவில்லை.பரமசிவன் உடனே அவரிடம் என்ன வரம் வேண்டுமெனக் கேட்டார்.சிவன் பார்வதியைத் தரிசித்ததைவிட பெரிய வரம் ஏதுமில்லை என்று ஞானி சொன்னார்.பார்வதி மீண்டும் வற்புறுத்த ஞானி சொன்னார்,''ஊசியின் பின்னே நூல் தொடர்ந்து செல்ல வரம் தாருங்கள்,''பார்வதி ஏமாற்றத்துடன் ,''அதுதான் ஊசியின் பின்னே நூல் வந்து கொண்டுதானே இருக்கிறது,''என்றார்.ஞானி சொன்னார்,''நியமங்களை சரியாக செய்து வந்தால்,கடவுளின் அருள் பின்னால் தானே வந்து கொண்டு தானே இருக்கும்.''

நீங்கள் யார்?

போரில் இறந்த தனது மகன் அபிமன்யுவை நினைத்து ஏங்கினான் அர்ஜுனன். அவனை சொர்க்கத்திலாவது போய் நேரடியாக சந்தித்தால்தான் மனக் கவலை தீருமெனக் கண்ணனிடம் புலம்ப கண்ணனும் அர்ஜுனனை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றான்.அப்போது அங்கு அபிமன்யு மகிழ்வுடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தான்.மனம் மகிழ்ந்து அர்ஜுனன் அவனிடம் செல்ல,அபிமன்யுவோ,''நீங்கள் யார்/?''என வினவினான். அதிர்ச்சியடைந்தவனாக அர்ஜுனன் கண்ணனை நோக்கினான்.கண்ணன் அமைதியாக சொன்னான்,''அர்ஜுனா,அபிமன்யு பூலோகத்தில் உன்னுடன் வாழ வேண்டிய காலம் வரை வாழ்ந்தான்.அக்கடமை முடிந்ததும் உனக்கும் அவனுக்கும் உள்ள சம்பந்தம் முடிந்து விடுகிறது.எனவே அவனுக்கு உன்னை இப்போது தெரியாது.''

ஏமாற்றியது யார்?

சுபி ஞானி பரீத் தன சீடர்களுடன் ஒரு நீண்ட பயணம் செல்ல நடந்து சென்றார்.அவர்கள் நகர எல்லையைத் தாண்டுமுன்  அந்நகருக்கு பதவி ஏற்பதற்காக புதிய கவர்னர் எதிரில் வந்து கொண்டிருந்தார். கவர்னர் ,தன எதிரே பெரிய கூட்டத்தைப் பார்த்ததும்,தன்னை வரவேற்க வந்த குழு என்று நினைத்துக் கொண்டு,''அடடா,இந்த வெயிலில் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு என்னை வரவேற்க வந்தீர்கள்?இதற்கு அவசியம் இல்லையே!'' என்றார்.பரீதின் சீடர் ஒருவர்,''நாங்கள் தங்களை வரவேற்க வரவில்லை.நாங்கள் நெடிய பயணம் சென்று கொண்டிருக்கிறோம்.''என்றார். கவர்னரின் முகம் வாடி விட்டது எனினும் சமாளித்துக் கொண்டு சென்றார்.பரீத் அப்போது ஒன்றும் சொல்லவில்லை.கவர்னர் சென்ற சிறிது நேரம் கழித்து.தன சீடரிடம்,''நாங்கள் உங்களை வரவேற்க வரவில்லை என்று அப்பட்டமாகச் சொல்லி இருக்க வேண்டாமே!அவர் எவ்வளவு சங்கடத்தில் மாட்டிக் கொண்டார் பார்த்தாயா?''என்று கேட்டார்.சீடர் சொன்னார்,''நான் அவ்விதம் சொல்லவில்லை என்றால் நாம் அவரை ஏமாற்றியவர் ஆகா மாட்டோமா?''பரீத் சொன்னார்,''நம் மீது தவறு ஏதுமில்லை கவர்னர் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டார்.நாம் என்ன செய்ய முடியும்?''

ஞானகுரு.

ஞானி ஒருவர் தான் ஞானம் பெற்றதுக்குக் காரணம் ஒரு நாய்தான் எனக் கூறி அதை விளக்கினார்:
ஒரு நாள் குளக்கரை அருகே அமர்ந்திருந்தேன்.ஒரு நாய் தாகத்துடன் நீர் அருந்த
வந்தது.வேகமாய் நீர் குடிக்கச் சென்ற நாய் குரைத்துக் கொண்டே சட்டெனப் பின் வாங்கியது.சிறிது நேரம் இவ்வாறே திரும்பத் திரும்பசெய்து கொண்டிருந்த நாய்,தாகம் அதிகரித்தவுடன் துணிச்சலுடன் தண்ணீரில் வாய் வைத்துக் குடிக்க ஆரம்பித்தது.அப்போதுதான் அது உணர்ந்தது,இதுவரை தண்ணீரில் தெரிந்தது தன் பிம்பம்தான் என.அதுவரை நாய் தயங்கியதற்குக் காரணம் அதன் உருவமே.இதனால் ஞானத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கும் விளக்கம் கிடைத்தது.நான் ஞானம் அடையத் தடையாய் இருப்பது,'நான்'தான் என்பதை உணர்ந்தேன்.அந்த 'நான்'என்ற அகந்தையை ஒழித்தபோது ஞானியாகி விட்டேன்.

கைங்கர்யம்

திருப்பதியில் பெருமாளுக்கு பூக்கட்டும் திருப்பணி செய்தவர் அனந்தாழ்வார்.அனந்தன் என்றால் பாம்பைக் குறிக்கும்.ஆதிசேடன் பெயர் தாங்கிய அடியவரே அனந்தாழ்வார்.ஒரு நாள் பூக்களைத் தொடுக்கும்போது பாம்பு ஒன்று அவர் விரலைத் தீண்டியது.அனால் அவர் பதறாது தன் பணியினைத் தொடர்ந்தார்.பூமாலை கட்டி பெருமாள் தோளில் சாத்தப்போனார்.பெருமாள் பதறினார்,''அனந்தா,பாம்பு உன்னைக் கடித்துள்ளது.''நிதானமாக அனந்தாழ்வார் சொன்னார்,''ஸ்வாமி,கடித்த பாம்புக்கு விஷம் அதிகம் என்றால் கைங்கர்யம் அங்கே.கடியுண்ட பாம்புக்கு(இந்த அனந்தருக்கு)விஷம் அதிகமானால் கைங்கர்யம் இங்கே.இதில் எனக்கு என்ன கவலை?''

மனது மாறும்.

ஒரு முனிவரிடம் வேதம் கற்க ஒரு அரசன் வந்தான்.யாரும் அங்கு மதிக்கவில்லையென அவனுக்குக் கோபம்.குருகுலத்தில் ஆசிரியர்,மாணவர் என்ற பாகுபாடு தவிர வேறு எதுவும் கிடையாது.அரசனும் இங்கே மாணவனே என்று முனிவர் எடுத்துரைத்தார்.''நீங்கள் சொல்வதைக் கேட்பதால் இவர்கள் மனம் மாறிவிடுமா?''என்று மன்னன் கேட்டான்.மாறும் என்று முனிவர் சொல்ல அதை நிரூபிக்க வேண்டும் என்றான் மன்னன்.''இந்த அரசன் ஒரு அடி முட்டாள்.படித்தவர்களை மதிக்கத் தெரியாதவன்.கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்,''என்று மற்ற மாணவர்களைப் பார்த்து முனிவர் சொல்ல மாணவர்கள் செய்வதறியாது நின்றனர்.ஆனால் அரசனின் கண்கள் கோபத்தால் சிவந்தன.வாளை உருவிக்கொண்டு முனிவரை நோக்கிப் பாய்ந்தான்.''உன்னை யாரும் எதுவும் செய்து விடவில்லையே!பிறகு ஏன் இந்தக் கோபம்?''என்று அமைதியாக கேட்டார் முனிவர்.''அப்படி வேறு ஆசை உள்ளதா?நீங்கள் பேசிய வார்த்தைகள் போதாதா?''என்று கத்தினான் அரசன்.      அப்படியானால் நான் சொன்ன வார்த்தைகள் உங்கள் மனதில் உள்ள உணர்ச்சிகளை மாற்றிவிட்டன.அதேபோல மாணவர்கள் மனதிலும் மாற்றிவிடும் என்று பயந்தீர்கள்.எனவே நான் கூறுவதைக் கேட்கும் மனது மாறும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?''என்று அமைதியாகக் கேட்டார் முனிவர்.தவறை உணர்ந்தான் அரசன்.

ஏன் அழ வேண்டும்?

ஞானி சுவான்சுவின் மனைவி இறந்துவிட்டார்.அவருடைய நண்பர் ஹு சு துக்கம் விசாரிக்க வந்தார்.அப்போது சுவான்சு மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடிக் கொண்டிருந்தார்.ஒரு பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு தாளம் வேறு!ஹு சுவுக்கு இக்காட்சியைப் பார்த்தவுடன் கோபம் வந்துவிட்டது.''என்ன அவமானம்?என்ன இருந்தாலும் அவள் உன் மனைவி.வாழ்நாள் முழுவதும் உனக்காக வாழ்ந்தவள்..உனக்கு அழுகை வரவில்லைஎன்றால் அது ரொம்பக் கேவலமாகத் தெரிகிறது.நீ பாட்டுக்கு ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறாயே.இது உனக்கே நன்றாக இருக்கிறதா?''என்று சுவான்சுவைப் பார்த்துக் கேட்டார். சுவான்சு சிரித்துக் கொண்டே சொன்னார்,''என் அன்பிற்குரிய மனைவி இறந்தவுடன் எனக்கு மிகுந்த துக்கம் ஏற்பட்டது.விழிகளில் கண்ணீர் கரை புரண்டு வந்தது.ஆனால் உடனே எனக்கு ஒரு உண்மை ஞாபகம் வந்தது.இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரணம் அடைவது தவிர்க்க இயலாதது.இது இயற்கையின் மகத்தான நியதி.என் பாச மனைவி தற்போது இந்த வாழ்விலிருந்து ஓய்வெடுத்துத் தூங்குகிறாள்.அவள்
என் வருகைக்காக அமைதியாகக் காத்திருக்கிறாள். நான் ஏன் கதறிக்கொண்டும் அழுது கொண்டும் ஆர்ப்பாட்டம் செய்தும் அவள் அமைதியை கெடுக்க வேண்டும்?நான் அப்படி செய்தால் எனக்கு இயற்கையின் உன்னத நியதிகள் எதுவும் தெரியாது என்று பொருள்.''

தாவோ என்றால் என்ன?

ஞானி யாகூ சான் ,தன சீடர்களுக்கு உற்சாகமாக போதனைகள் செய்து கொண்டிருக்கும்போது அவரைப் பார்க்க அந்தப் பகுதியின் கவர்னர் வந்தார்.யாகூசானின் உதவியாளர் அவருக்கு அறையைக் காண்பித்தார்.அப்போது யாகூசான் ஒரு சூத்திரத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார்.யாகூசான் கவர்னர் வந்ததைப் பார்க்கவில்லை.அவர் கவனம் முழுவதும் படிப்பில் இருந்தது.கவர்னர்  இயல்பிலேயே கோபக்காரர்.அவர் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு திரும்பத் தயாரானார்.அப்போது அவர் அதிருப்தியைத் தெரிவிக்க எண்ணி,''உங்கள் முகத்தைப் பார்ப்பதைவிட  உங்கள் பெயரே சிறந்தது என்று நினைக்கிறேன்.'' என்றார்.அப்போதுதான் அவரைக் கவனித்த யாகூசான்,''உங்களுடைய கண்களைத் தாழ்த்தி காதுகளுக்கு ஏன் நீங்கள் மதிப்புக் கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.கவர்னர் தன் இரு கைகளையும் ஒன்று சேர்த்து,வணக்கமாகக் குனிந்து,''தாவோ என்றால் என்ன என்று தயவு செய்து சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.யாகூசான் உடனே தன் கைகளை மேலும் கீழும் அசைத்துக் காட்டி,''புரிந்து கொண்டீர்களா?''என்றார்.கவர்னருக்குப் புரியவில்லை. யாகூசான் பிறகு சப்தமாக,''மேகங்கள் ஆகாயத்தில் இருக்கின்றன.நீர் கிணற்றில் இருக்கிறது.''என்றார்.கவர்னருக்கு இப்போது புரிந்துவிட்டது.அவர் மிகவும் மகிழ்வுடன்,மன நிறைவு பெற்று யாகூசானை குனிந்து வணங்கி கீழ்க்கண்ட பாடலை யாகூசானுக்கு அன்பளிப்பாக அளித்தார்.
''முயன்று பெற்ற அனைத்தின் தோற்றமும் நாரையினது போன்றதே.
ஆயிரம் பைன் மரங்களுக்கிடையே இரண்டு கம்பங்கள் வழியாகக் கேட்க வந்தேன்.
தாவோ பற்றி உதவாக்கரை வாதம் இல்லை.
மேகங்கள் ஆகாயத்தில்,தண்ணீர் கிணற்றில்.''

எதிர்பார்ப்பது தவறா?

மன்னன் ஒருவன் முனிவரிடம்,கேட்டான்,''கீதையிலே,'கடமையை செய்,பலனை எதிர்பாராதே,'என்று கூறப்பட்டுள்ளது.நல்ல முறையில் ஆட்சி செய்ய வேண்டியது என் கடமை.அதனை மக்கள் பாராட்ட வேண்டும் என்று நினைப்பது தவறா?''முனிவர் அதற்கு,''உன் கேள்விக்கு பதில் சொல்ல நீ ஒரு வாரம் என் ஆசிரமத்தில் சாப்பிட வேண்டும்,''என்றார்.மன்னனும் அவ்வாறே அங்கு சாப்பிட்டு வந்தான்.சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது.அதை ரசித்து அவன் சாப்பிட்டான்.ஒரு வாரம் முடிந்தவுடன் முனிவர் கேட்டார்,''இங்கு சாப்பாடு எப்படி இருந்தது?''மன்னன் சொன்னான்,''நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது.இதை சமைத்த சமையல்காரரை என் அரண்மனைக்கு அழைத்துச் சென்று தலைமை சமையல்காரராக நியமிக்கப் போகிறேன்,''முனிவர் சொன்னார்,''சுவையாக சமைக்க வேண்டியது ஒரு சமையல்காரரின் கடமை.இந்த சமையல்காரன் தன் கடமையை செய்தான்.இப்போது அவனுக்கு அரண்மனையில் வேலை கிடைத்துவிட்டது.கடமையை சரியாக செய்தவனுக்கு அதற்கான பலன் கண்டிப்பாக தேடி வரும்.''
ஆசையின் அடுத்த நிலைதான் எதிர்பார்ப்பு.ஆசைக்கு அளவில்லை.பலனை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டால் நம்மால் அந்த செயலில் நிச்சயம் வெற்றி பெற இயலாது.சரியாக செய்தால் அதற்கான பலன் நமக்குக் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

என்னைத் தெரிந்து கொள்ள

ஞானி நாகார்ஜுனா தினமும் பிச்சை எடுத்து உணவருந்துவது வழக்கம்.அவர் மீது பக்தி கொண்டிருந்த அந்நாட்டு அரசி அவருக்கு தங்கத்தாலான ஒரு  பிச்சைப் பாத்திரத்தை வழங்கினார்.அதன்பின் அதிலேயே அவர் பிச்சை வாங்கி வந்தார்.ஒருநாள் ஒரு திருடன் பாத்திரத்தைப் பார்த்துவிட்டான்.அதை எப்படிடும் திருடி விடுவது என்று எண்ணி அவரைப் பின் தொடர்ந்தான். நாகார்ஜுனாவும் அன்று இரவு ஒரு மடத்தில் தங்கி சாப்பிட்டார்.திருடனைப் பார்த்த அவர் அவனுடைய எண்ணம் அறிந்து அப்பாத்திரத்தை அவன் இருந்த பக்கம் எறிந்தார்.திருடனால் இதை நம்ப முடியவில்லை.அவர் அவனை தன் பக்கம் வரவழைக்கவே இப்படி செய்தார்.அதேபோல அவனும் அவரிடம் வந்து தங்கப் பாத்திரத்தை அவரிடம் திரும்பக் கொடுத்தான்.அதற்கு அவர் அதை அவனுக்கு ஏற்கனவே பரிசாக அளித்து விட்டதாகக் கூறினார்.திருடன் நம்ப முடியாமல்,''இதனுடைய விலை என்ன தெரியுமா?;;என்று கேட்டான்.அதற்கு அவர் சொன்னார்,''நான் என்னை அறிந்து வைத்திருப்பதால் வேறு எதுவும் எனக்கு விலை உயர்ந்த பொருளாகத் தெரியவில்லை,''உடனே திருடன்,''நான் என்னை எப்படித் தெரிந்து கொள்வது?''என்று கேட்டான்..அதற்கு  அவர்,''திருடும்போது சுய உணர்வோடு ,எச்சரிக்கையோடு,கவனத்தோடு இரு,''
என்றார்.அதன்பின் திருடன் இரண்டு முறை திருட முயற்சி செய்தான்.ஆனால் அவன்
ஞானி சொன்னதுபோல சுய உணர்வோடு இருந்தபோது செல்வம் எதையும் திருட அவனுக்கு விருப்பம் வரவில்லை.கடைசியாக வெறுங்கையோடு நாகார்ஜுனாவிடம் வந்தான்.அவருடைய சீடனான்.

புனிதம்

பெரும் புகழ் பெற்ற கபீர் தாசர் இஸ்லாம் மதத்தில் பிறந்தாலும் ஜாதி மத பேதங்களை மீறி மனித நேய தத்துவங்களை உலகுக்குச் சொன்னவர்.ஒரு முறை,சில பிராமணர்கள் கங்கை நதியின் புனிதமாக்கும் தன்மை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.ஒரு மரக் கோப்பையில் கங்கை நீரை நிரப்பி,'குடியுங்கள்,' என்று அவர்களிடம் நீட்டினார் கபீர்.பிற மதத்தைச் சேர்ந்த ஒருவர்தரும் கோப்பையைத் தொடுவதா என்று அவர்கள் தயங்கினர்.கபீர் பளிச்சென்று கேட்டார்,''என் கோப்பையை கங்கை நீர் புனிதமாக்காது என்றால் என் பாவங்களைக் கழுவி புனிதமாக்கும் என்று எப்படி நான் நம்புவது?''

பட்டாம் பூச்சி

வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என  குருவிடம்  சீடன்  கேட்டான்.குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.வித விதமான பட்டம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.குரு சீடனை ஒரு பட்டாம் பூச்சியைப் பிடித்து வரச்சொன்னார்.எவ்வளவோ ஓடி முயன்றும் அவனால் ஒரு பட்டாம் பூச்சியைப் பிடிக்க முடிய வில்லை.''பரவாயில்லை,நாம் இந்தத்  தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்''எனக்கூறி குரு சீடனை தோட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.இருவரும் தோட்டத்தின் அழகைக் கண் குளிரக் கண்டு களித்தனர்.சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கின.சீடன் துரத்திய பட்டாம் பூச்சி அவன் கைகளிலேயே இப்போது வந்து அமர்ந்தது.குரு சிரித்தார்.
''இது தான் வாழ்க்கை.மகிழ்ச்சியைத் தேடித் துரத்துவது வாழ்க்கை அல்ல. நாம் வாழ்வை அமைதியாக ரசிக்கும் போது மகிழ்ச்சி  தானே கிடைக்கும்,''என்றார் குரு.

வரம்

ஒருவன் சிவ பெருமானை நோக்கி வருடக் கணக்காகத் தவமிருந்தான்.சிவன் அவன் எதிரில் தோன்றி மூன்று வரங்கள் தருவதாகக் கூறினார்.முதல் இரண்டு வெகுமதிகள் அவன் குழப்பத்தால் வீணாயிற்று.மூன்றாவது வரம் என்ன கேட்கலாம் என அவரிடமே வினவினான்.அவர் சொன்னார்,''ஒரே ஒரு விருப்பம்,ஒரே ஒரு ஆசை தான் மதிப்பு வாய்ந்தது.அது தான் ஆசையின்மை.நீ கேட்க வேண்டியது ஆசையின்மையைத்தான்.நீ வேறு எதைக் கேட்டாலும்,அடுத்த கணமே வேறு ஏதாவது வேண்டுமென விரும்புவாய்.''

சிறந்த அறிஞர்

சாக்ரடீசுக்கு சிறையில்நஞ்சு கொடுக்கப் படுவதற்கு முன் டெல்பியிலிருந்த தெய்வீக அசரீரி,அவரை,முழு உலகிலும் மிக அறிவு கொண்டவர் என்று மொழிந்தது.இதைக் கேட்டு மகிழ்வடைந்த பலர் ஏதென்ஸ் சென்று அவரிடம்,''இதுவரை இதுபோல் நடந்தது இல்லை.இதற்கு முன் யாரையும் டெல்பியின் தெய்வ வாக்கு உலகிலேயே சிறந்த அறிஞர் என்று கூறியதில்லை.உங்களைத் தான் சிறந்த அறிஞர் என்று கூறியிருக்கிறது.நீங்கள் தான் உலகின் சிறந்த அறிஞர்.''என்றனர்.
அதற்கு சாக்ரடீஸ் ,''நீங்கள் டெல்பிக்குத் திரும்பச்சென்று,இது நாள் வரை அது சரியாகச் சொல்லியிருந்தாலும்,இம்முறை அது தவறு செய்து விட்டது என்று அதனிடம் கூற வேண்டும்.ஏனெனில் எனக்கு உண்மையில் ஒன்றும் தெரியாது.''செய்தி கொண்டு வந்தவர்கள் அதிர்ச்சியுற்றனர்.
அவர்கள் திரும்பச் சென்று தெய்வ வாக்கிடம்,''சாக்ரடீஸ் இதை மறுக்கிறார்.அவர் உலகிலேயே சிறந்த அறிவாளி இல்லை என்றும் தனக்கு  ஒன்றும் தெரியாது என்றும் கூறுகின்றார்,''என்றனர்.
இங்கே தான் இந்த சம்பவத்தின் அழகே இருக்கிறது.தெய்வ வாக்கு,''அதனால்தான் அவர் உலகில் தலை சிறந்த அறிவாளியாக இருக்கிறார்.இதில் முரண்பாடு எதுவுமில்லை.''என்று கூறியது.

கொடிய நரகம்

ஒருவன் இறந்தபின்,தான் நரகத்தில்  இருப்பதாக உணர்ந்தான்.ஆனால் எல்லோரும் பயமுறுத்தியதை போல்கொதிக்கும் எண்ணைக் கொப்பரைகளோ, வேறு எந்த பயங்கரமான் சம்பவங்களோ  இல்லை.அவன்  ஒரு குளிரூட்டப் பட்ட,அழகான வேலைப் பாடுகளுடனும் எல்லா வசதிகளும்  உள்ள ஒரு அறையில் இருந்தான்.ஆனால் அந்த அறையில் வெளியே செல்லும் வழி கிடையாது.அவனுடன் அந்த அறையில் மூன்று பேர் இருந்தனர்.கேட்ட ஆசைகள் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கப் பட்டன.உடன் இருந்தவர்கள்,ஒரு வயதான பெண்,ஒரு இளம் பெண்,ஒரு இளைஞன்.ஓரிரு நாட்கள் அவர்கள் கதை பேசிக் கொண்டிருந்தனர்.பேசிப் பேசி,இனிப் பேச ஒன்றுமில்லை என்ற நிலை.பேச்சைத் தொடர வழியில்லை.அங்குள்ள விளக்குகளை அணைக்க இயலாது.அவர்கள் உண்டார்கள்;உறங்கினார்கள்.அவர்கள் தனிமையிலும் இல்லை.ஆக அவர்கள் ஒருவருக்கொருவர் துன்பம் உண்டாக்குபவர்கள் ஆகிவிட்டார்கள்.திடீரென விழித்துக் கொண்ட மனிதனுக்கு இது தான் நரகம் என்பது தெரிந்தது.அவனுக்கு அங்கே இனி வாழ்வது முடியாத காரியமாய்த் தோன்றியது.மற்ற மூவரின் இருப்பே சுமையாகத் தெரிந்தது.தற்கொலை செய்து கொள்ள வழியில்லை.இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கேட்ட போது,நரகம் அழிவில்லாதது என்று பதில் வந்தது.ஆக, அடுத்தவர் தான் நரகம்.நம்முடைய மதங்கள் சித்தரிக்கும் நரகத்தை விடக் கொடியது.இதற்குப் பதிலாக எண்ணைக் கொப்பரையில் தூக்கி எறியப் பட்டால் கூடத் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் ஒரு மூடப் பட்ட அறையில் சிலருடன் எப்போதும்  இருப்பது என்பது பெரிய நரகம் தான்!
                                               ---   ஜீன் பால் சார்த்ரே சொன்ன  கதை.

துறவறம்

ஒரு வயதான கணவனும் மனைவியும் துறவறம் செல்லத் தீர்மானித்து வீடு சொத்து எல்லாவற்றையும் விட்டு வெளியேறினர்.சிறிது தூரம் சென்ற போது பாதையில் ஒரு வைரக்கல் கீழே கிடப்பதை கணவர் பார்த்தார்.தன மனைவி அதைப் பார்த்தால் அவளுக்கு அதன் மீது ஆசை வந்து விடுமோ என்று பயந்து விரைந்து சென்று தன காலுக்கடியில் அதை மறைத்தார்.அவருடைய நடவடிக்கை மனைவிக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.என்ன விஷயம் என்று வலியுறுத்திக் கேட்டதால் கணவர் உண்மையைச் சொன்னார்.மனைவி சொன்னார்,''வாருங்கள்,வீட்டுக்குப் போகலாம்.இன்னும் உங்களுக்கு வைரக் கல்லுக்கும் சாதாக் கல்லுக்கும் வித்தியாசம் தெரிகிறது.எனவே உங்களுக்கு துறவறம் போகக் கூடிய பக்குவம் இன்னும் வரவில்லை என்பது தெளிவாகிறது.அந்தப் பக்குவத்தை அடைந்தபின் நாம் துறவறம் செல்வோம்.''

ஏழு ஜாடி தங்கம்

கவலையில்லாத மனிதன் ஒருவன் இருந்தான்.அவன் எப்போதும் புல்வெளிகளிலேஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் திரிவான்.அவனுக்கென்று ஒரே ஒரு  துண்டு  தவிர வேறு உடமைகள் கிடையாது.கவலையில்லாத அவனைக் கண்டு சைத்தானுக்குக் கவலை உண்டாயிற்று.அவனுக்குக் கவலை உண்டாக்க முடிவு செய்தது.ஒரு நாள் பகலில் அவன் ஒரு மரத்தடியில் ஆனந்தமாகப் படுத்திருந்த போது சைத்தான்,அசரீரியாகச் சொன்னது,''மனிதனே,நீ படுத்திருக்கும் இடத்திற்கு கீழே ஏழு  ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது.அதையெடுத்துச் சென்று மகிழ்வுடன் இரு.''முதலில் அக்கறை காட்டாத அம்மனிதன் பிறகு அசரீரி உண்மையானது தானா என்று சோதித்துப் பார்க்க முடிவு செய்து தோண்டிப் பார்க்கையில் எழு ஜாடிகள் தென்பட்டன.ஆர்வமுடன் அவற்றை எடுத்துப் பார்த்ததில் ஆறு ஜாடி முழுக்கவும்,ஏழாவது ஜாடியில் பாதி அளவிலும் தங்கக் காசுகள் இருந்தன.அவனுக்கு தங்கக் காசுகளைப் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி.ஆனால் ஏழாவது ஜாடியில் பாதி அளவே தங்கம் இருந்தது அவனுக்கு  வருத்தத்தைத் தந்தது.உடனே அவன் ஒரு முடிவு செய்தான்.கடுமையாகப் பாடுபட்டுச் சம்பாதித்தேனும் அந்த ஏழாவது ஜாடியைத் தங்கக் காசுகளால் நிரப்ப வேண்டும் என்று எண்ணி அன்று முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்.சம்பாதித்த பணத்தை தங்கக் காசுகளாக மாற்றி ஏழாவது ஜாடியில் போட்டு வந்தான் பல காலம் உழைத்தும் அந்த ஜாடி நிரம்பவில்லை.அவனுடைய மகிழ்ச்சி,ஆனந்தமான பாடல்கள்,ஆட்டபாட்டங்கள் எல்லாம் அவனிடமிருந்து விடைபெற்று சென்று விட்டன.அவன் இப்போது கவலையே உருவானவனாக இருந்தான்.சைத்தான் அவனுடைய முயற்சியில் வெற்றி பெற்று விட்டான்.அந்த மனிதனைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஒரு துறவி அவனுடைய சமீப கால மாற்றங்களைக் கண்டு அவனிடம் கேட்டார்,''எங்கே போயிற்று உன் சந்தோசமெல்லாம்?அந்த ஏழு   ஜாடி தங்கம் உனக்குக் கிடைத்ததா?''அவனுக்கு ஒரே ஆச்சரியம்.அவருக்கு இது எப்படித் தெரிந்தது என்று வினவினான்.துறவி சொன்னார்,''இதற்கு முன் இந்த ஜாடிகளை எடுத்தவர்கள் கதி இவ்வாறே ஆயிற்று.மேலும் இந்த ஏழாவது ஜாடி இறந்த ஒரு பேராசைக்காரனின் மண்டை  ஓட்டில் செய்யப்பட்டது.அதை நிரப்ப யாராலும் முடியாது.முதலில் அந்த எழு ஜாடிகளையும் தூக்கி எறிந்து விட்டு முன் போல் ஆனந்தமாக வாழ்வாயாக!''
பணத்தின்குணமே  அதுதான்.எவ்வளவு சேர்த்தாலும் அது திருப்தி
ஏற்படுத்தாது.மேலும் மேலும் சேர்க்கவே  தூண்டும்.மனிதனுடைய மகிழ்ச்சியை அழித்து விடும்.