கரும்பாக இரு

தன் மகன் சோம்பேறியாகவும்,பொறுப்பு இல்லாதவனாகவும்  இருப்பதைக் கண்ட ஒரு தந்தை அவனை அவ்வூரில் உள்ள பெரியவரிடம் அழைத்துச் சென்று அவனுக்கு அறிவுரை கூறுமாறு வேண்டினார்.பெரியவரும் சிறுவனிடம்,''கரும்பாக இரு''என்றார்.பின் அதன் பொருளையும் பொறுமையாக விளக்கிச் சொன்னார்.சிறுவன் மறுநாள் எல்லோரிடமும் அன்பாகப் பேசினான்.கடுஞ்சொல் தவிர்த்தான்.அவனுடைய இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்த தந்தை ஒரு வாரம் கழித்து மறுபடியும் அவனை அப்பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.அவனும் மகிழ்ச்சியுடன் அவரைப் போய்ப் பார்க்க அவர்,''எறும்பாக இரு,''என்றார்.அதன் பொருள் தெரிந்து கொண்ட அவன் சுறுசுறுப்பாக செயல் பட ஆரம்பித்தான்.சோம்பேறியாக இருந்த அவன் சுறு சுறுப்பானதும் அவனுக்கு பள்ளியிலும்,நண்பர்களிடமும்,உறவினர்களிடமும் நல்ல பெயர் வந்தது.எல்லோரும் அவனை பாராட்டவும் அவனுக்கு சிறிது தலைக் கனம் ஏற்பட்டது.மீண்டும் அவன் தந்தை பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னபோது அது தேவையில்லை என மறுத்தான். பின் அவர் வற்புறுத்தலுக்காக அவன் பெரியவரிடம் சென்றான்.அவன் முகத்தில் தோன்றிய கர்வ குறிப்பினைக் கண்ட பெரியவர் இம்முறை,''துரும்பாக இரு,''என்றார்.அதன் பொருள் அறிந்த சிறுவன் தன தவறை உணர்ந்து செயல்பட்டு நல்ல பெயர் எடுத்தான்.