ஒரு முனிவரிடம் வேதம் கற்க ஒரு அரசன் வந்தான்.யாரும் அங்கு மதிக்கவில்லையென அவனுக்குக் கோபம்.குருகுலத்தில் ஆசிரியர்,மாணவர் என்ற பாகுபாடு தவிர வேறு எதுவும் கிடையாது.அரசனும் இங்கே மாணவனே என்று முனிவர் எடுத்துரைத்தார்.''நீங்கள் சொல்வதைக் கேட்பதால் இவர்கள் மனம் மாறிவிடுமா?''என்று மன்னன் கேட்டான்.மாறும் என்று முனிவர் சொல்ல அதை நிரூபிக்க வேண்டும் என்றான் மன்னன்.''இந்த அரசன் ஒரு அடி முட்டாள்.படித்தவர்களை மதிக்கத் தெரியாதவன்.கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்,''என்று மற்ற மாணவர்களைப் பார்த்து முனிவர் சொல்ல மாணவர்கள் செய்வதறியாது நின்றனர்.ஆனால் அரசனின் கண்கள் கோபத்தால் சிவந்தன.வாளை உருவிக்கொண்டு முனிவரை நோக்கிப் பாய்ந்தான்.''உன்னை யாரும் எதுவும் செய்து விடவில்லையே!பிறகு ஏன் இந்தக் கோபம்?''என்று அமைதியாக கேட்டார் முனிவர்.''அப்படி வேறு ஆசை உள்ளதா?நீங்கள் பேசிய வார்த்தைகள் போதாதா?''என்று கத்தினான் அரசன். அப்படியானால் நான் சொன்ன வார்த்தைகள் உங்கள் மனதில் உள்ள உணர்ச்சிகளை மாற்றிவிட்டன.அதேபோல மாணவர்கள் மனதிலும் மாற்றிவிடும் என்று பயந்தீர்கள்.எனவே நான் கூறுவதைக் கேட்கும் மனது மாறும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?''என்று அமைதியாகக் கேட்டார் முனிவர்.தவறை உணர்ந்தான் அரசன்.